சென்னை:

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் மீதான  குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்த அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

தமிழக மக்களை குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் சிலர் அதிமுக விசுவாசிகள் என்று கூறப்பட்டது. அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் முக்கிய குற்றவாளிகளான 2 பேரின் குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது.

இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  மஹா புயல் காரணமாக நடுக்கடலில் சிக்கி தவித்த அனைத்து மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாக  தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர்,  மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அரசு பரிசீலிக்கும் என்றும், அரசு நிதிசுமையில் இருக்கிறது என்பதை அவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

பொள்ளாச்சி விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை, சென்னை உயர்நீதி மன்றமே அவர்களின் குண்டாஸை ரத்து செய்துள்ளது  என்றார்.

விஜய்சேதுபதியின் மன்டி விளம்பரம் குறித்த கேள்விக்கு, ஆன்லைன் வர்த்தகத்தால் பாதிப்பு ஏற்படுமானால் மத்திய அரசுக்கு அது தொடர்பாக வலியுறுத்த தமிழக அரசு தயராக உள்ளது என்றும், சிறு வியாபாரிகளை பாதிக்காத வகையில் அரசு எப்போதும் நடவடிக்கை எடுக்கும் என்றும்  கூறினார்.