அதிமுகவை தொட்டால்தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள்! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை:

திமுகவை தொட்டால்தான் ஆளாக முடியும் என எங்களைத் தொடுகிறார்கள் என்றும், படம் ஓடவேண்டும் என்பதற்காக தங்களை விஜய் தாக்கி பேசியுள்ளார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சமீபத்தில் நடைபெற்ற பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், அதிமுக அரசை விமர்சனம் செய்தார். ‘பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி ஓட்டுனர் மீதும், பேனர் அச்சடித்தவர் மீதும் பழி போடுகிறார்கள். யார் மீது பழி போட வேண்டுமோ அதை செய்யாமல் உள்ளனர்’ என்றும், யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ அவரை அங்கே உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்றும் விமர்சித்தார்.

விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுதியது, இதுகுறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு விட்டு சென்னை திரும்பிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, தமிழகத்தின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றித் தரப்படும் என்று நிதி அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்திற்கு ரூ. 4500 கோடி வரவேண்டி உள்ளது என்றும், 8.17% அளவுக்கு தமிழகம் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது என்றும் கூறினார்.

அதையடுத்து, நடிகர் விஜய் பேச்சு குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், அதிமுக பழுத்த மரம் என்பதால் கல்லடி படுகிறது என்றவர்,  அதிமுகவை தொட்டால்தான் ஆளாக முடியும் என தொடுகிறார்கள் என்று விமர்சித்தவர், அதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள் என்பது தான் வரலாறு.

படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் மீது இதுபோன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன என்றும்,  விஜய்யோ, கவுண்டமணியோ செந்திலோ யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்க லாம். ஆனால் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் என்பதைதான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.