சென்னை:

பட்ஜெட் அறிக்கையுடன் சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் ஜெயக்குமார் அஞ்சலி  செய்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் ஜெயக்குமார் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான புதிய அமைச்சரவை பொறுப்பேற்றதும், பட்ஜெட் தயாரிப்புப் பணிகள்  தீவிரமாக நடைபெற்றன.

ஏற்கனவே மீன்வளத்துறையை கவனித்து வந்த ஜெயக்குமாரிடம் கூடுதலாக நிதித்துறை ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் நிதியமைச்சர் ஜெயக்குமார் பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

இதற்கு முன்னதாக  தனது வீட்டில் இருந்து காலை ஒன்பது மணிக்கு கிளம்பிய நிதி அமைச்சர் ஜெயக்குமார், நேராக மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்றார்.

அங்கு நிதி நிலை அறிக்கையை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று உழைத்தவர் ஜெயலலிதா. மக்கள் பயன்பெறும் வகையில் முன்னோடியான திட்டங்களை கொண்டு வந்தவர் அவர். மக்களுக்கான திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தும்’  என்றார்.