சென்னை:

த்தியஅரசு கொண்டு வந்துள்ள “NRC, CAA சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் கோலம் போட்டு பெண்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில்,  “கோலம் போடுபவர்களை பார்த்தால் குடும்ப பெண்கள் போல தெரியவில்லை” என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோலம் போட்டு, அதில் NO NRC, NO CAA என எழுதி எதிர்ப்பு தெரிவிக்கும்படி திமுக தலைவர் ஸ்டாலின் மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதைத்தொடர்ந்து சென்னையில் கோலம் வரைந்த சில பெண்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில்,  தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பெண்கள் கோலம் வரைந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த மா.பா.பாண்டியராஜன்,  கோலம் போட்டதால் கைதில்லை.. கோலம் சொன்ன கருத்து அலங்கோலமாக இருந்ததால் கைது செய்யப்பட்டனர் என   விளக்கமளித்தார்.  தேச விரோத கருத்துகளை கோல வடிவில் சொன்னாலும் அது தவறுதான். எனவே கோலத்தில் பிரச்சினை இல்லை. கோலம் சொன்ன கருத்துகள் அலங்கோலமாக இருந்தது, கோலம் போடுபவர்களை பார்த்தால் குடும்ப பெண்கள் போல தெரியவில்லை” என்று கூறினார்.

மா.பா.வின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.