மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்ய வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

டில்லி:

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள மத்திய அமைச்சரும், முன்னாள் செய்திப்பத்திரிகை ஆசிரியருமான எம்.ஜே.அக்பர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர்

ஏற்கனவே பாஜ அமைச்சர் மேனகா காந்தி, அக்பர் மீதான புகார்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைமையும், மத்திய அமைச்சர் அக்பர், புகார் குறித்து திருப்திகரமான விளக்கம் தெரிவிக்க வேண்டும் இல்லையேல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்பால் ரெட்டி வலியுறுத்தி உள்ளார்.

சமூக வலைதளமான டிவிட்டரில்,  #MeToo என்ற ஹேஸ்டேக்கில் பாலியல் சேட்டைகளுக்கு ஆளான பெண்கள் தங்களது  குமுறல்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதில் நாடு முழுவதும் உள்ள திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், ஊடகத்துறையை சேர்ந்தவர்கள், விளையாட்டு வீராங்கனைகள் என பல தரப்பினரும் தாங்கள் சந்தித்த பாலியல் சேட்டைகள் குறித்து எழுதி வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது 6 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து இருந்தனர்.

எம்.ஜே.அக்பர், மீது பிரியா ரமணி என்ற பத்திரிகையாளர் முதலில் குற்றம் சாட்டியிருந்தார். அதில்,  எம்.ஜே. அக்பரின் கதையை எழுதவுள்ளேன். இந்த கதையில் அவரது பெயரை குறிப்பிடவில்லை. ஏனென்றால் அவர் என்னிடம் எதுவும் செய்யவில்லை. ஆனால், ஏராளமான பெண்கள் எம்.ஜே. அக்பர் தொடர்பான மோசமான கதைகளை வைத்துள்ளனர். அவர்கள் ஒருவேளை அக்பர் குறித்த விவரங்களை வெளியிடலாம் என்று கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து மேலும் பலர் அவர்மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர்.

இதுகுறித்து  மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் பதில் அளிக்காமல் சென்று விட்டார். அதேவேளையில், மேனகா காந்தி இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில் எம்.ஜே.அக்பர் உடனடியாக பதவி விலக வேண்டும் அல்லது அவரை பதவி நீக்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், காங்கிரஸ் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான  ஜெய்ப்பால் ரெட்டி கூறி உள்ளார்.

வெளியுறவு இணை அமைச்சராக இருக்கும் எம்.ஜே. அக்பர் தற்போது நைஜீரியாவில் இருப்பதாக கூறப்படுகிறது.