ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்க ரூ.25,000 கோடி! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு

டெல்லி: ரியல் எஸ்டேட் துறையை சீர்திருத்தும் வகையில் ரூ. 25,000 கோடி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து இருக்கிறார்.

மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

ரியல் எஸ்டேட் துறையில் நிலவும் பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 1,600 திட்டங்களில் கட்டப்பட்டு வந்த 4.58 லட்சம் வீடுகள் முடங்கி இருக்கின்றன.

அந்த திட்டங்கள் பல கட்ட நிலைகளில், முடிக்கப்பட முடியாமல் பாதியில் உள்ளன. அவற்றை தீர்ப்பது குறித்து, அரசு, ரிசர்வ் வங்கியுடன் தீவிரவாக ஆலோசித்து வருகிறது.

அதன்படி நிறைவடையாமல் இருக்கும் கட்டுமான திட்டங்களுக்கு சிறப்பு நிதி தொகுப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ரியல் எஸ்டேட் துறையை புத்துயிராக மாற்ற ரூ. 25,000 கோடி ஒதுக்கப்படும்.

முதல்கட்டமாக ரூ.10,000 கோடி விடுவிக்கப்பட இருக்கிறது. அதற்காக ரிசர்வ் வங்கி, வீடு வாங்குபவர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருடன் ஆலோசிக்கப் பட்டு இருக்கிறது. ரியல் எஸ்டேட் துறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கைகள் வலுப்பெறும் என்றார்.