Random image

எம்.எல்.ஏக்களின் அமைச்சர் கனவுகள்..

 வரலாறு முக்கியம் அமைச்சரே…

மூத்த பத்திரிகையாளர்  எஸ் கோவிந்தராஜ் ( Govindaraj Srinivasan ) அவர்கள், “நீங்க மினிஸ்டர் ஆவீங்கன்னு பேரூர் ஜோஸியர் சொல்லிட்டாரு!” என்ற தலைப்பில் எழுதிய முகநூல் பதிவு :

d

டந்த 2001ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றது. வெற்றிச்சான்றிதழ் பெற்றதும், சென்னை புறப்பட்ட ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுமே மினிஸ்டர் கனவிலேயே தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். அவர்களுக்கு ஆசை இல்லாவிட்டாலும், அவருடன் வந்த ஆதரவாளர்கள் அவ்வப்போது வேப்பிலை அடித்து உசுப்பேத்திக் கொண்டு இருந்தனர்.

அது குறித்து தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் இரு பக்க ரவுண்ட் அப் எழுதியிருந்தேன். இப்போதும் சென்னையில் உள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களின் நிலை இதேதான் என்பதால், ‘எவர்கிரின்’ ஸ்டோரியாக இந்த ரவுண்ட் அப் ஞாபகத்துக்கு வந்தது.

இனி அந்த கட்டுரை…

“சென்னையை நோக்கிப் புறப்பட்ட போது, கோவை மாவட்டத்தை சேர்ந்த அந்த ஒன்பது எம்.எல்.ஏ.க்களும் பயங்கர டென்ஷனில் இருந்தனர். ‘அம்மா உங்களை சும்மா எம்.எல்.ஏ.வா மட்டும் இருக்க விடுவாங்களா… “கண்டிப்பா மினிஸ்டராகத்தான் ஆகப்போறீங்க’ என்று அவர்களது ஆதரவாளர்கள் உசுப்பி விட்டுக்கொண்டு இருந்தனர். சில எம்.எல்.ஏ.க்களுக்கு வீட்டிலேயே அந்த இனிப்பு கனவு ஊட்டப்பட்டு விட்டது. ‘குலதெய்வத்தை கும்பிட்டு கிளம்புங்க. நீங்க மின்ஸ்டர் ஆகிடுவீங்கன்னு ஏற்கனவே பேரூர் ஜோஸியர் சொல்லியிருக்கிறார்’ என்கிற ரீதியில் தாய்க்குலங்கள் தங்கள் எம்.எல்.ஏ.,கணவன்மார்களை வாழ்த்தி அனுப்பினார்கள்.

சென்னையில் அமைச்சர் பட்டியல் ரெடியாகி அறிவிப்பு வரும்வரை இந்த எம்.எல்.ஏ.க்கள் பட்டபாடு கொஞ்சமல்ல. சென்னையில் நடந்த அந்த பரபரப்பான காட்சிகளின் தொகுப்பு:

எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவாளர்கள் ஆளுக்கொரு தினுசில் அலசிக்கொண்டு இருந்தனர். ‘ஜாதிகளின் அடிப்படையில் அமைச்சர் பதவி வழங்கப்படும்’ என்றார் ஒருவர். ‘அது எப்படிங்க? சீனியாரிட்டி, விசுவாசம் எல்லாம் பார்த்துதான் கொடுப்பாங்க அம்மா’ என்றார் இன்னொருவர். இப்படி ஆரம்பித்து கல்வித்தகுதி, மாவட்டவாரியாக பிரதிநிதித்துவம், அதிக வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தது, முக்கிய விஐபிக்களை தோற்கடித்தவர்கள் என அமைச்சர் பதவிக்கு பல தகுதிகளை இவர்களாகவே பட்டியல் போட்டுக் கொண்டு உட்கார்ந்து இருந்தனர்.

தூங்கும் நேரம் போக மீதி நேரம் எல்லாம் இதே டிஸ்கஷன்.

ஆதரவாளர்கள் இப்படி படுத்தியெடுக்க, வேறு வகையான தொந்தரவுகளுக்கும் எம்.எல்.ஏ.க்கள் ஈடுகொடுக்க வேண்டி வந்தது. ‘இப்பத்தான் தலைமைக் கழகத்தில் இருந்து வருகிறேன். உங்க பேரு அமைச்சர் லிஸ்டிலே இருக்கிறதா பேச்சு அடிபடுது…’ என்றும், போயஸ் கார்டன் போயிருந்தேன். நமக்கு வேண்டிய ஒரு ரிப்போர்டர் ஒருத்தர் நீங்க நிச்சயம் மினிஸ்டர் ஆகிடுவீங்கன்னு சொன்னார்’ என்றும் எம்.எல்.ஏக்களிடம் சில, ‘கம்பீரமான’ கரை வேட்டிகள் சொல்லி டென்ஷன் கூட்டும் வேலையை சிறப்பாக செய்து கொண்டு இருந்தன.

பொங்கலூர் தொகுதி எம்.எல்.ஏ.வான தாமோதரன், கட்சியில் 25 ஆண்டுகாலமாக ஒன்றிய செயலாளராக இருப்பவர். தீவிரமான ஜெ விசுவாசி. இவருக்கு அமைச்சராகும் அதிர்ஷ்டம் அடிக்கும் என பேச்சு அடிபட்டதால், நாம் தாமோதரனை தேடினோம். மைலாப்பூர் அருகே 100 ரூபாய் ரூம் ரெண்டில் ஒரு லாட்ஜில் அவர் தங்கியிருப்பது தெரியவந்தது. அவரோடு அவரது தொகுதியைச் சேர்ந்த கட்சிக்கார்களுக்கும் 10 ரூம் போட்டு கொடுத்து தங்க வைத்திருந்தார் தாமோதரன். ‘உங்களை விட சீனியர் யாருமில்லைண்ணே’ என இவரை உசுப்பேத்திக்கொண்டு இருந்தனர்.

பொள்ளாச்சி ஜெயராமன் அறையில் அவரது ஆதரவாளர்கள் மாறி மாறி டிவி சேனல்களை ஆசையோடு பார்த்துக்கொண்டு இருந்தனர். அமைச்சரவை பதவியேற்புக்கு முதல் நாள் இரவு ஜெயராமனுக்கு தொழில் மற்றும் கனிமவளத்துறை ஒதுக்கப்பட்ட செய்தி வந்து சேர்ந்தது.
பல்லடம் எம்.எல்.ஏ., செ.ம.வேலுச்சாமிக்கும், திருப்பூர் எம்.எல்.ஏ., சிவசாமிக்கும் கூட அமைச்சராகும் ஆசை இருந்தது. ஆனால், ஏற்கனவே கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த இருவர் அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த நிலையில், இவர்களின் வாய்ப்பு மங்கிப்போனது.

பேரூர் தொகுதி எம்.எல்.ஏ., ரோகிணி அம்மாவை ‘செண்டிமெண்டாக’ அட்டாக் பண்ண தனது குடும்பத்துடன் சென்னையில் முகாமிட்டு இருந்தார். அவருக்கு மட்டும் ரூம் போட்டுக்கொண்டு, கூட வந்த கட்சிக்காரர்களை கழட்டி விட, அவர்கள் திட்டியபடியே ஊர் போய் சேர்ந்தனர்.

யாதவ இனத்தின் ஒரே எம்.எல்.ஏ., இவர்தான். கண்ணப்பனை டீஸ் செய்யும் விதத்தில் இளைவரான இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தொடர்ந்து ஆர்வக்குரல்கள் ஒலித்தன. ஆனால், ‘மக’ நட்சத்திரம் ரோகிணியை கண்டு கொள்ளவில்லை.

மேட்டுப்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜின் அறையில் சீட்டுக்கச்சேரி பரபரப்பாய் நடந்து கொண்டு இருந்தது. வந்தால் வரட்டும் என்று ஜாலியாய் இருந்த இவருக்கு வீட்டுவசதித்துறை ஒதுக்கப்பட்டது.

அமைச்சர் பதவி கிடைக்காதவர்கள் அடுத்தகட்டமாக ‘எப்படியும் ஏதாவது வாரியம் கிடைக்கும்’ என்று அடுத்தகட்ட கனவில் மூழ்க துவங்கியிருப்பதாக கேள்வி.”  –  இப்படி முடிகிறது அந்த செய்திக்கட்டுரை.