லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவுகள் முடிவடைந்த நிலையில், அம்மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பரிந்துரையை ஏற்று, கவர்னர் ராம்நாயக், அமைச்சரவையிலிருந்து ஓம் பிரகாஷை டிஸ்மிஸ் செய்தார். இந்த ஓம் பிரகாஷ் சுஹல்தேவ் பாரதீய சமாஜ் கட்சியின் தலைவராவார். இது, பாரதீய ஜனதாவின் கூட்டணிக் கட்சியாகும்.

இவர், மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். இந்த மக்களவைத் தேர்தலில், கோஸி தொகுதியிலிருந்து பாரதீய ஜனதா சார்பில் போட்டியிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதை அவர் மறுத்ததிலிருந்து, அவருக்கும் பாரதீய ஜனதாவுக்கும் மோதல் இருந்து வந்தது.

மேலும், அந்தக் கட்சியின் சார்பில் பல தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதோடு, சில இடங்களில் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு அந்தக் கட்சி ஆதரவும் அளித்தது.

இந்த நிலையில்தான், தேர்தல் முடிவடைந்த கையோடு, அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் ஓம் பிரகாஷ்.