சென்னை: கண்ணுக்கு காமாலை ஏற்பட்டால் கட்சிகளின் காட்சிகள் மாறும் என பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு ஓ.எஸ்.மணியன் பதிலடி தெரிவித்து உள்ளார்.

நாகை மாவட்டம் நம்பியார்நகர் மீனவ கிராமத்தில் நடந்த சுனாமி குடியிருப்புக்கான பட்டா வழங்கும்நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர் ஓஎஸ்.மணியன் கலந்துகொண்டு 111 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டு உள்ளார். இதனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிகை வாக் சூடும் என்றவர், அதிமுக தலைமையிலான  கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து  கருத்து தெரிவித்தபோது,   கண்ணு மாறாமல் இருந்தால் காட்சிகள் மாறாது, கண்ணுக்கு காமாலை ஏற்பட்டால் கட்சிகளின் காட்சிகள் மாறும் என்றும் , பொன்னாரின்  திமுக கூட்டணி செல்வோம் என்ற கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மேலும், கல்யாண வீட்டிற்கு சாப்பிட வந்தவர்கள், தங்கள் வீட்டு அடுப்பை இடிப்பதில்லை என்றவர், தமிழகத்தில் பாஜகவை வளர்க்கவே அவர் இதுபோன்று பேசி வருவதாகவும்  குற்றம் சாட்டினார்.

திமுக இணையவழி உறுப்பினர் சேர்க்கை 10லட்சத்தை எட்டியுள்ளது குறித்த கேள்விக்கு, வலது பக்கத்தில் எத்தனை பூஜ்யம் வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம் என்று கிண்டல் செய்தார்.

 32 ஆண்டுகளுக்கு பின் ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்தது என்ற சரித்திரத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படைத்தார். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாய வேண்டும் என்பதுதான் ஒரு தாயின் ஆசை. அந்த தாயின் ஆசையை நிறைவேற்றுகிற வகையில், 2021ல் நடைபெறும் பொதுத்தேர்தலில் அதிமுக மீண்டும் தமிழகத்தில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும்.
சரித்திரத்தை முதல்வர் எடப்பாடி தலைமையில் ஓபிஎஸ் வழிகாட்டுதலுடன் நடத்திக் காட்டுவோம். அதிமுகவை பொறுத்தவரை தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியாக 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தையே நிறுத்தி தனித்துகளம் கண்டு ஆட்சியை பிடித்துகாட்டி இருக்கிறோம். எனவே, மக்களோடு கூட்டணி என்கிற முறையில் தேர்தலை நடத்திக் காட்டுவோம்.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த   பாஜக முத்த தலைவர் பொன்னார்,  “2021-ல் தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமையும்… அதில் அதிமுக இருக்கலாம் திமுக இருக்கலாம் அல்லது பிற கட்சிகள் இருக்கலாம்.  சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் எந்த கட்சியோடு கூட்டணி சேர்வது என்பது குறித்து தலைமை முடிவு எடுக்கும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.