” ராமாயணம் பாருங்க  – அமைச்சரின் ’அட்வைஸ்’.. : நீக்கப்பட்ட டிவீட்

டில்லி

த்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ராமாயணம் தொடர் பார்க்குமாறு டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்து பிறகு அந்த பதிவை நீக்கி உள்ளார்.

நீக்கபட்ட டிவிட்டர் பதிவின் ஸ்கிரீன் ஷாட்

கொரோனா வைரஸ் அடுத்து எந்த கட்டத்தை நோக்கி நகரப்போகிறது என சாமானிய குடிமகனும் கன்னத்தில் கை வைத்து கவலையில் ஆழ்ந்துள்ளான்.

இந்த நிலையில், ஊருக்குச் சுப செய்திகளைச் சொல்ல வேண்டிய மத்திய தகவல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று காலை 10 மணி சுமாருக்கு ஒரு டிவிட்டர் பதிவு வெளியிட்டிருந்தார்.

வீட்டு ஷோபாவில் ஹாயாக அமர்ந்து, தூரதர்ஷனில்’ அவர் ,ராமாயண’ நாடகம் பார்க்கும் காட்சியே அது.

( 80 களில் தூரதர்ஷனை ஆக்கிரமித்திருந்த ராமாயண நாடகம் நேற்று முதல் மீண்டும் ஒளிபரப்பாகிறது)

அவர் நாடகம் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் தான் டெல்லி அருகே ஆயிரக்கணக்கான பொதுமக்கள், சொந்த ஊருக்கு செல்ல பஸ்சுக்கு காத்திருந்து- போதுமான பஸ்கள் கிடைக்காமல் விழி பிதுங்கிக் கொண்டிருந்தனர்.

பிரகாஷ் ஜவடேகருக்கு வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்ததால், டிவிட்டர் பக்கத்தில் இருந்து ‘ராமாயண’ காட்சியை நீக்கி விட்டு, சீரியசாக தான் வேலை பார்ப்பது போல் இன்னொரு படக்காட்சியை- டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

‘ரோம் நகரம் தீப்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததாகச் சொல்வார்கள்.

அது நிஜமா எனத் தெரியாமல் இருந்தது..

அமைச்சரின் டிவிட்டர் பக்கத்தைப் பார்த்தால் அந்த சம்பவம் உண்மையாக நடந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

– ஏழுமலை வெங்கடேசன்