நானும் பெரிய அப்பாடக்கர்தான் : டிவி பேட்டியில் பாஜக அமைச்சர் வெளி நடப்பு

--

டில்லி

த்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேரடி தொலைகாட்சி பேட்டியில் கோபித்துக் கொண்டு வெளியேறினார்.

ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியானால் அது குறித்த வரவேற்பும் விமர்சனங்களும் வருவது வழக்கமான ஒன்றாகும். தொலைக்காட்சி ஊடகங்கள் சம்பந்தப்பட்ட கட்சி பிரமுகர்களிடம் விளக்கம் கேட்பது வழக்கமாகும். பாஜக வின் தேர்தல் அறிக்கை வெளியானதில் இருந்து அது குறித்த வரவேற்பை விட விமர்சனங்கள் பல மடங்கு உண்டாகி இருக்கிறது.  தொலைக்காட்சி ஊடகங்கள் பாஜக பிரமுகர்களிடம் இதற்காக  விளக்கங்கள் கேட்டு வருகிறது.

அவ்வகையில் ஒரு நேரடி தொலைக்காட்சி பேட்டியில் மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கலந்துக் கொண்டார். அப்போது தொலைக்காட்சி செய்தியாளர் ரவிசங்கர் பிரசாத் இடம் தேர்தல் அறிக்கை குறித்து பல வினாக்கள் எழுப்பினார்.

குறிப்பாக அந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள ராமர் கோவில், அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவு நீக்கம் மற்றும் அனைவருக்கும் பொதுச் சட்டம் உள்ளிட்டவைகள் குறித்த கேள்விகள் ரவிசங்கர் பிரசாத்திடம் கேட்கப்பட்டது.  இந்த கேள்விகள் ரவிசங்கர் பிரசாத் கோபத்தை தூண்டியதால் அவர் நிருபரிடம் கடுமையாக கூச்சலிட்டுள்ளார்..

ரவிசங்கர் பிரசாத் அந்த செய்தியாளரிடம், “நீங்கள் என்னிடம் சரியாக பேசினால் நான் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன். நீங்கள் மூத்த செய்தியாளர்கள் என்றால் நானும் இந்நாட்டின் மூத்த அரசியல்வாதி ஆவேன். இது போல அர்த்தமில்லாத பேச்சுக்களை பேசுவதை தொடர்ந்தால் நானும் உங்களுக்கு வணக்கம் சொல்லி விடை பெறுவேன்” எனக் கூறி தனது மைக்கை கழற்றி வைத்து விட்டு அங்கிருந்து வெளியேறி உள்ளார்.