டில்லி

டில்லியில் தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.80க்கு விற்கப்படுவதை கட்டுப்படுத்த முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்..

தலைநகர் டில்லியில் வெங்காயத்தின் விலை கடுமையாக ஏறி உள்ளது.   ஒரு கிலோ வெங்காயம் ரூ. 80க்கு விற்கப்படுகிறது.  இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.   இது குறித்து இன்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அதிகாரிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்தினார்.  அதன் பின் செய்தியாளர்களிடம் உரை நிகழ்த்தினார்.

அவர், “வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.   வெங்காய உற்பத்தி இந்த வருடம் மிகவும் குறைவாக உள்ளது.   நாங்கள் மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மற்றும் ராஜஸ்தானில் உள்ள ஆல்வார் ஆகிய இடங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய தயாராக உள்ளோம்.   ஆனால் என்னால் விலையைக் கட்டுப்படுத்த முடியாது.  அது என் கையில் இல்லை.

டில்லி அரசு வெங்காயத்தை ரேஷன் கடைகளில் விற்பனை செய்யவும் மகாராஷ்டிராவில் இருந்து மலிவு விலையில் அதற்காக வெங்காயம் அனுப்ப வேண்டும் எனவும் கோரி உள்ளேன்.   இதுவரை எதுவும் பதில் வரவில்லை.   நாசிக்கில் தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.32க்கு விற்கப்படுகிறது.   போக்கு வரத்து செலவைச் சேர்த்தால் ரூ. 40 வரை விலை ஆகும்.   ஆல்வாரில் ரூ. 28 லிருந்து ரூ. 30 விலையில் ஒரு கிலோ வெங்காயம் விற்கப்படுகிறது.    அங்கிருந்து வந்ததும் விலை குறைய வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.    டில்லி மக்கள் மொத்த விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.50-60க்கு விற்கப்படுவதாகவும்,  ஆனால் சில்லறை விலையில் ரு.80க்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.