டில்லி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறினாலும் அரசு அதன் மீது விதிக்கப்பட்ட வரியை குறைக்காது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

முன்பு 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது தினமும் மாற்றப்பட்டு வருவது தெரிந்ததே.  டில்லியில் தற்போது பெட்ரோல் விலை ரூ.6.08 உயர்ந்து லிட்டர் ரூ. 69.12க்கும், டீசல் விலை ரூ.3.65 உயர்ந்து ரூ.57.01 க்கும் விற்கப்படுகிறது.  இந்த கடும் விலை உயர்வுக்காக வரி விகிதங்கள் குறைக்கப்படுமா என்னும் கேள்விக்கு மத்திய எண்ணெய் வள அமைச்சர் தர்மேந்திர பிரதான் வரியை அரசு குறைக்காது என அறிவித்துள்ளார்.  அதே போல ஆயத் தீர்வையும் அரசு குறைக்காது என அறிவித்துள்ளார்.

இதுவரை அரசு நான்கு முறை ஆயத் தீர்வை உயர்த்தி உள்ளது.  இந்த உயர்வு காரணமாக சர்வதேச கச்சா எண்ணெய் விலைக் குறைவுக்கான பயன் வாடிக்கையாளர்களைப் போய் சேர்வதில்லை என்னும் குற்றச்சாட்டு உள்ளது.  தர்மேந்திர பிரதான் இதற்கு முன்பு ஜி எஸ் டி வந்ததும் பெட்ரோல் டீசல் விலை கணிசமாக குறையும் என சொல்லி இருந்தார்.  ஆனால் ஜூலை முதல் அமுலான ஜி எஸ் டி யில் பெட்ரோல் டீசல் இணைக்கப்படவில்லை.  எனவே விலை குறையும் என எதிர்பார்த்தது நடக்கவில்லை.

இது குறித்து அமைச்சர் பிரதான், “பெட்ரோலைப் போல அல்லாமல் டீசல் உற்பத்தித் துறைகளில் அதிகம் உபயோகப் படுத்தப் பட்டு வருகிறது.  பெட்ரோலின் உபயோகமும் அதிகரித்து வருகிறது.  எனவே பெட்ரோலியப் பொருட்களை ஜி எஸ் டி யின் கீழ் கொண்டு வந்து விலை குறைக்க உதவ வேண்டும் என நிதி அமைச்சகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.  அமைச்சகம் விரைவில் இது குறித்து முடிவெடுக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.