சென்னை: இந்து அமைப்புகளை கண்காணிப்பது தொடர்பாக பள்ளிகளுக்கு எந்த வித சுற்றறிக்கையும் அனுப்பப்பட வில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார்.

கல்வி நிலையங்களில் மத ரீதியாக, இந்து இளைஞர் முன்னணி, இந்து மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகள் மாணவர்களை திரட்ட முயல்வதாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது.

இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப் பட்டதாக தகவல்கள் வெளியாகின. அந்த அறிக்கையில், இது போன்ற முயற்சிகளை தடுக்க வேண்டும் என்றும், உடனடியாக இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டதாக தெரிகிறது.

இந் நிலையில், அது போன்றதொரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட வில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

எங்களை பொறுத்தவரையில் இதுபோன்ற எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்பட வில்லை. பள்ளிக்கல்வித் துறையை பொறுத்த வரை எந்த சுற்றறிக்கையாக இருந்தாலும் முதலமைச்சர் ஒப்புதலுடன் தான் வெளியிடப்படும். இதுபோல ஒரு அறிக்கை வெளியாகவில்லை என்றார்.