மழை நீர் சேகரிப்பு சேலஞ்ச் முறையில், குடிநீர் பற்றாக்குறையை போக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என தமிழக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பேசியுள்ள அவர், “இறைவன் கொடுத்த கொடை மழை. அந்த மழை நீரை சேமிப்பது மிக மிக அவசியம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர். 200 சதுர அடி கொண்ட வீட்டில் முறையாக மழை நீரை சேகரித்தோமெனில், ஒரு வருட காலத்திற்கு ஒரு குடும்பமே நீர் பற்றாக்குறையின்றி வாழ முடியும்.

தமிகத்தில் உள்ள அத்தனை குடும்பங்களும், அவரவர் வீட்டில் மழை நீரை சேகரிக்க வேண்டும்.ஒரு துளி மழை நீரை கூட இனி நாம் வீணாக்க கூடாது. இதை ஒரு சவாலாகவே நாம் எடுத்து செய்வோம். இதை தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மழை நீரை சேமிப்போம். நமக்காக, நாட்டிற்காக, நாளைக்காக” என்று தெரிவித்துள்ளார்.

கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், மழை நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் விதமாக அரசு தரப்பிலிருந்து அமைச்சர் பேசும் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.