தமிழகத்தில் தற்போது கூடுதாக 2,400 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாகவும், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலுமணி, “சென்னையில் கடந்த ஆண்டிலேயே பருவமழை பெய்யவில்லை. கடும் வறட்சி நிலவுகிறது. மழைப்பொழிவு இல்லை. கடந்த 2017ம் ஆண்டை காட்டிலும் 62 சதவிகித மழைப்பொழிவு குறைந்துள்ளது. ஆனால், சென்னையில் அப்போது தினசரி 450 மில்லியன் லிட்டர் தண்ணீர் தரப்பட்டது. இப்போது 520 மில்லியன் லிட்டர் தருகிறோம். தினசரி சென்னையில் மட்டும் 9,100 லாரிகள் மூலம் தண்ணீர் தரப்படுகிறது. பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் கூட லாரி மூலம் குடிநீர் தரப்படுகிறது. கடந்த மூன்றாண்டு காலத்தில் முதல்வர் குடிநீர் பணிகளுக்காக 15,838 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 268 குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 1088.99 கோடி ரூபாய் செலவில், 41,464 வறட்சி நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசிடம் நானே பலமுறை நேரில் சென்று அமைச்சர்களிடம் பேசி கூடுதல் நிதி பெற்று வந்துள்ளேன். ஆந்திராவிலிருந்து 13 டி.எம்.சிக்கு பதில் இதுவரை 6.40 டி.எம்.சி நீர் தான் வந்துள்ளது. எனவே, தமிழகத்தின் குடிநீர் திட்டப்பணிகளில் அரசு கூடுதல் அக்கறை செலுத்தி வருகிறது. கடந்த காலங்களை காட்டிலும் சிறப்பான தண்ணீர் விநியோகம் நடக்கிறது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை” என்று தெரிவித்தார்.