மீண்டும் பணமதிப்பிழப்பு வருமா என இப்போது சொல்ல முடியாது: மத்திய அமைச்சர்

னாஜி

த்திய அமைசர் சுரேஷ் பிரபு இன்னொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து தற்போது சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.

கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பொதுமக்கள் கடும் துயருற்றனர். பல நிறுவனங்கள் மூடப்பட்டு லட்சக்கணக்கானோர் பணி இழந்ததற்கு இந்த நடவடிக்கை காரணம் என பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். செல்லாத நோட்டுக்களை மாற்ற மக்கள் மணிக்கணக்கில் வரிசையில் நின்று அவதிப்பட்டனர்.

ஆயினும் அரசு அறிவித்த படி கருப்புப்பணம் பிடிபடவில்லை. அனைத்து நோட்டுக்களும் மாற்றப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. அத்துடன் தற்போது நடந்த மக்களவை தேர்தலில் ஏராளமான ரொக்கப்பணம் பிடிபட்டதன் மூலம் கருப்புப் பண ஒழிப்பு நடைபெறவில்லை என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தை ஒழிக்க மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என பலரும் தெரிவித்து வருகின்றனர். முன்பு வங்கி அதிகாரிகள் பலர் கருப்புப் பணத்தை மாற்ற உதவியதாகவும் தற்போது மீண்டும் வரவுள்ள பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் முந்தைய குறைகள் களையப்பட்டு கருப்புப் பணம் முழுவதுமாக ஒழிக்கப்படும் என அதிகாரபூர்வமற்ற கருத்து உலவி வருகிறது.

இது மக்களுக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று கோவா மாநிலத்தில் செய்தியாளார்களிடம் உரையாடிக் கொண்டு இருந்தார். அப்போது அவர், “கருப்புப் பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வருவது நல்ல முறையாகும். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

ஆனால் இன்னொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்படுமா என்பது குறித்து நான் இப்போது  எதுவும் சொல்ல முடியாது. அரசு கருப்புப் பணத்தை முழுமையாக ஒழிக்க உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை ஆராய்ந்துக் கொண்டு இருக்கிறது.” என எச்சரிப்பது போல் கூறி உள்ளார்.