நான் உன்னை இங்கேயே கொல்லுவேன் : எம் எல் ஏவுக்கு சட்டசபையில்  அமைச்சர் மிரட்டல்

ஸ்ரீநகர்

ம்மு காஷ்மீர் மாநில அமைச்சர் இம்ரான் அன்சாரி சட்டசபையில் விவாதத்தின் போது தேவேந்தர் ராணா எம் எல் ஏ வை தான் அங்கேயே கொல்லுவேன் என மிரட்டல் விடுத்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜி எஸ் டி இன்னும் அமுலாக்கப்படவில்லை.  ஜி எஸ் டி குறித்து சட்டசபையில் நேற்று கடும் விவாதம் நடந்தது.  எதிர்கட்சி தலைவரும் எம் எல் ஏ வுமான தேவேந்தர் ராணா தாம் பேசுகையில், ஜி எஸ் டி இப்போதுள்ள நிலையில் தமது மாநிலத்துக்கு ஒத்து வராது என்றும், இதனால் காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டுள்ள தனி உரிமைகள் பறி போய்விடும் என தெரிவித்தார்.  விவாதத்தில் குறுக்கிட்ட அமைச்சர் இம்ரான் அன்சாரி மிகவும் காட்டமாக ராணா ஒரு இரட்டை வேடதாரி என குறிப்பிட்டார்.   தனது வியாபாரங்கள் அனைத்தையும் ஜிஎஸ்டி அமுலில் உள்ள மாநிலங்களுக்கு மாற்றி விட்டு, இப்போது அதை எதிர்ப்பதாக நாடகமாடுவதாக கூறினார்.

ராணா, தான் மாற்றியது உண்மைதான் எனவும், ஆனால் வரி ஏய்ப்பு செய்யும் குணம் தனக்கில்லை எனவும் கூறினார்.  மேலும் எரிச்சலான அமைச்சர் ”நான் உன்னை இங்கேயே அடித்துக் கொல்லுவேன்.  உன்னுடைய நிழல் வியாபாரங்கள் எல்லாம் எனக்குத் தெரியும்.  உன்னை விட பெரிய திருடன் உலகில் யாரும் இல்லை.  சாதாரண எண்ணெய் வியாபாரம் செய்த உனக்கு இவ்வளவு சொத்து எப்படி வந்தது என்பது எல்லோருக்கும் தெரியும்” என கத்தி கூச்சலிட்டார்.   ராணா அமைதியாக “எனக்கு ஜம்மு காஷ்மீர் நலன் மட்டுமே முக்கியம்” என பதிலளித்தார்.

சட்டசபையில் இருந்த மூத்த உறுப்பினர்களும், துணை சபாநாயகரும் அமைச்சரின் இந்த பேச்சை கண்டித்தனர்.   மேலும் இது போன்ற செய்கைகள் சட்டசபையின் பணத்தை வீணாக்குவதோடு, இருவரின் நடத்தையைக் கண்டு மக்கள் நகைக்ககூடும் எனவும் தெரிவித்தனர்