மதுரை நகரை இரண்டாம் தலைநகராக்க அதிமுக அமைச்சர் தீர்மானம்

துரை

துரையை இரண்டாம் தலைநகராக உருவாக்க மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் அமைச்சர்  ஆர் பி உதயகுமார் தீர்மானம் இயற்றி உள்ளார்.

இன்று மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுகவினர் திருமங்கலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  இதில் மதுரை மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் அம்மா பேரவை செயலாளர் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்துக் கொண்டார்.

அவர் இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார்.

அந்த தீர்மானத்தில், “அகில இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது பெரிய மாவட்டமாக உள்ளது.  சென்னையில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  எனவே எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் இந்த சிறப்புத் தீர்மானத்தின் மூலம் முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம்.

இன்று வரை தென் மாவட்ட மக்கள் நலனுக்காக இருவரும் பல நலத்திட்டங்களை அமைத்துள்ளனர்.  அவ்வகையில் மதுரை நகரை தமிழகத்தின் இரண்டாம் தலைநகராக உருவாக்க வேண்டும்.  இது தென் மாவட்ட மக்களின் ஒட்டு  மொத்த விருப்பமாகும்.

ஏற்கனவே குஜராத்தில் காந்திநகர், அகமதாபாத் என அருகருகே இரு தலைநகர்கள் உள்ளன. ஆந்திர மாநிலத்தில் 3 தலைநகர் அமைய உள்ளன.  அவ்வகையில் மதுரையை இரண்டாம் தலைநகராக  மாற்றினால் பல வகைகளில் மக்களுக்கு உதவியாக விளங்கும்” என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.