முட்டையும், முட்டையும் சேர்ந்தால் முட்டைதான்! ரஜினி, கமலை மறைமுகமாக விமர்சித்து பேட்டியளித்த தமிழக அமைச்சர்

சென்னை: முட்டையும், முட்டையும் சேர்ந்தால் முட்டைதான், யார் முட்டை என்று நான் சொல்லவில்லை என்று மறைமுகமாக ரஜினிகாந்த், கமல்ஹாசனை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்து இருக்கிறார்.

தமிழக அரசியலில் ரஜினியின் வருகை எப்போது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் கட்சி தொடங்கி தேர்தலிலும் கால் பதித்தவர் கமல்ஹாசன்.

நானும் ரஜினியும் இணைய வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டால், தமிழக முன்னேற்றத்துக்காக ஒன்று சேர்ந்து பயணிப்போம் என்று கமல்ஹாசன் கூறினார். அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், தேவைப்பட்டால் இருவரும் தமிழக மக்களின் நலனுக்காக சேர்ந்து பயணிப்போம் என்றார்.

இருவரும் பேச்சும், தமிழக அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அவர்களது பேச்சுகளை கேட்ட ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர்.

இந் நிலையில் இருவருரின் கைகோர்ப்பு அரசியலை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மறைமுகமாக விமர்சித்துள்ளார். அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது இவ்வாறு விமர்சித்து இருக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது: முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டைதான். ஆனால், யார் முட்டை என்று நான் சொல்லவில்லை. மேலும் ஒன்றும் ஜீரோவும் சேர்ந்தால் தான் எண், ஆனால் இங்கு யார் ஒன்று என நான் கூற விரும்பவில்லை என்றார்.

கார்ட்டூன் கேலரி