மருந்துகள், ஊசிகள் இன்றி 40000 பேர் கொரோனாவில் இருந்து குணம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

விழுப்புரம்: இந்தியாவிலேயே, தமிழகத்தில் மருந்து, ஊசி இன்றி, 40 ஆயிரம் பேரை கொரோனாவில் இருந்து குணப்படுத்தி உள்ளோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.

கொரோனா நோய்த்தடுப்பு பணிகள் குறித்து விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆட்சியர் அண்ணாதுரை, மருத்துவக் கல்லூரி முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நோய் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் 3 மாதங்களாக ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் நோய் தடுப்பு பணியில் 24 மணி நேரமும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மாவட்டத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 697 பேரில் 430 குணமடைந்துள்ளனர்.

265 பேர் சிகிச்சையில் உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில்தான் அதிக மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது.

தமிழகத்தில் மட்டும் இதுவரை 40,000 பேர் எவ்வித மருந்து மாத்திரை ஊசி இல்லாமலேயே கொரோனாவில் இருந்து குணப்படுத்தி உள்ளோம். தமிழகத்தில்தான் குறைந்த இறப்பு விகிதத்தை பராமரித்து வருகிறோம்.  போதிய அளவிற்கு மருந்துகள் கையிருப்பில் உள்ளன என்று கூறினார்.

You may have missed