ஊழல் புகாரில் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டு வருவார்….ஆர்.பி உதயகுமார்

விருதுநகர்:

ஊழல் புகாரில் இருந்து விஜயபாஸ்கர் சட்ட ரீதியாக மீண்டு வருவார் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உண்மைக்கு மாறாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றன. உண்மையும், ஆதாரமும் இல்லாமல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதையும் கூற மாட்டார்.

ஊழல் புகாரினை சட்ட ரீதியாக எதிர்கொண்டு அமைச்சர் விஜயபாஸ்கர் அதில் இருந்து மீண்டு வருவார். அவரை பதவி விலகச் சொல்பவர்கள் முன் உதாரணமாக இருந்துள்ளார்களா? என நினைத்து பார்க்க வேண்டும்.

ரஜினி உள்ளிட்டோர் மக்களின் நாடித்துடிப்பை பார்த்து அரசியலுக்கு வர வேண்டும். நாடி ஜோசியம் பார்க்கக்கூடாது. தினகரன் தனது நலனை முன்னிலைப்படுத்தியே செயல்படுகிறார். மக்கள் நலனில் அவர் அக்கறை கொள்ளவில்லை. அ.தி.மு.க.வுக்கு எதிரி தி.மு.க.வும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தான்’’ என்றார்.