குற்றச்சாட்டு எழுப்பியதால் குற்றவாளி ஆக மாட்டார் : அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை
குட்கா வழக்கில் குற்றச் சாட்டு எழுப்பியதால் ஒருவர் குற்றவாளி ஆக மாட்டார் என அமைச்சர் விஜய பாஸ்கர் கூறி உள்ளார்.
தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்ய லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரை ஒட்டி தொடரப்பட்ட வழக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக சென்னையில் பல இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
அந்த சோதனைகள் முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் இல்லம், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம் உள்ளிட்ட சுமார் 40 இடங்களில் நடந்தது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த சோதனை நிறைவு பெற்றுள்ளது.
இதை ஒட்டி அவர், “நான் இன்று நடந்த சிபிஐ விசாராணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்தேன். ஒருவர் மீது குற்றசாட்டு எழுப்பியதாலேயே அவர் குற்றவாளி ஆகி விட மாட்டார். இந்த குட்கா முறைகேடு தொடர்பாக என்மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் போலி குற்றச்சாட்டுகளை சிலர் பரப்பி வருகின்றனர்.
இந்த குட்கா ஊழலில் தொடர்புள்ள மாதவராவ் என்பவர் யார் என்றே எனக்கு தெரியாது. அவரை நான் சந்தித்ததே இல்லை. மடியில் கனம் இல்லாத எனக்கு வழியில் பயம் கிடையாது. நான் இந்த பிரச்னையை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன்” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.