சென்னை

கொரோனா சந்தேகத்தினால் தனிமைப்படுத்திக் கொள்ள மறுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்றுடன் கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9 ஆகி உள்ளது.  இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அவ்வகையில் வெளிநாட்டில் இருந்து வருவோரைத் தனிமப் படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.  ஆனால் பலர் இதற்கு ஒப்புக் கொள்வதில்லை.

சமீபத்தில் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் இது போலத் தனிமைப்படுத்த ஒப்புக் கொள்ளாதது தமக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை எனவும் இதன் மூலம் நோய் அதிகம் பரவும் எனவும் கூறி இருந்தார். தமிழக அரசு சார்பில் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வெளிநாடு சென்று திரும்பியோர் சுய அறிவிப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டரில், “முழுமையாகக் கண்காணிக்கப்படும் சில பயணிகள் அரசின்  தனிமைப்படுத்திக் கொள்ளும் அரசின் உத்தரவை மீறுகின்றனர்.  இதனால் சமூகத்தில் கொரோனா பரவும் அச்சுறுத்தல் உள்ளது.

பயணிகளின் விவரங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டு காவல்துறை அவர்களை தேடி வருகிறது.  யாராவது அரசின் உத்தரவை மீறினால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.