அமைச்சர் விஜயபாஸ்கர் மனு பரிசீலிக்கப்படும்! நீதிமன்றத்தில் வருமானவரித்துறை தகவல்

சென்னை:

மைச்சர் விஜயபாஸ்கர் மனு குறித்து சட்டப்படி பரிசீலிக்கப்படும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில்,  வருமானவரித்துறை பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜெ.மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடை பெற்றதாக புகார் எழுந்தது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

அப்போது, அவரது வீட்டில், வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அப்போது ஏராளமான ஆவனங்களை கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதன் அடிப்படையில்,  2011-12ஆம் நிதி ஆண்டிலிருந்து கடந்த நிதியாண்டு வரை தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை மறுமதிப்பீடு செய்யும் நடைமுறைகளை வருமான வரித்துறை மேற்கொண்டு வருகிறது. இதில்,  12 பேர் சாட்சியம் அளித்த நிலையில், அவர்களில் 5 பேரை மட்டுமே விஜயபாஸ்கர் தரப்பு குறுக்கு விசாரணை செய்ய வருமான வரித்துறை அனுமதி வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதை எதிர்த்து, அனைவரிடமும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், மீதமுள்ள சாட்சியங்களான சேகர் ரெட்டி, சீனிவாசலு, மாதவராவ் உள்ளிட்ட 7 பேரையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க உத்தரவிடக் கோரியும்,, தனக்கு எதிராக திரட்டபட்ட ஆவணங் களின் நகல்களை வழங்க உத்தரவிடக்கோரியும் கூறப்பட்டது.

இந்த மனு மீது ஏற்கனவே நடைபெற்ற விசாரணைகளை தொடர்ந்து  இன்று மீண்டும் நீதிபதி அனிதா சுமந்த்  முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வது குறித்து, சட்டப்படி பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.  இந்த விளக்கத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.