விஜயபாஸ்கர் என்னை சந்தித்தார் : டிடிவி தினகரன் பரபரப்பு தகவல்
புதுக்கோட்டை
குட்கா வழக்கில் இருந்து காப்பாற்ற அமைச்சர் விஜய பாஸ்கர் தம்மை சந்தித்ததாக டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக மூன்றாக உடைந்தது. இதில் எடப்பாடி மற்றும் ஓ பி எஸ் அணி ஒன்றாகி அதிமுக சின்னத்தை கைப்பற்றியது. முன்றாவதான டிடிவி தினகரன் அணி தற்போது அமமுக என்னும் பெயரில் இயங்கி வருகிறது. அதிமுக சார்பில் நேற்று புதுக்கோட்டையில் அண்ணா பிறந்த நாள் விழா நடந்தது.
அப்போது அமமுக தலைவர் டிடிவி தினகரன், “தமிழ்நாட்டில் மருத்துவத் துறைக்கு டாக்டர் முத்துலெட்சுமி மூலமாக புதுக்கோட்டை முன் வரிசையில் இருந்தது. தற்போது அமைச்சர் விஜயபாஸ்கரின் குட்கா ஊழலால் சிறுமைப்பட்டு போய் விட்டது. சுமார் இரு மாதங்களுக்கு முன்பு நான் சென்னையில் நடைபயிற்சி செய்துக் கொண்டிருந்தேன்.
அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் என்னை வந்து சந்தித்தார். அவர் என்னிடம் தாம் வருமானவரித்துறை உள்ளிட்ட பல துறைகளின் சோதனையால் அவதியுறுவதாகவும் தம்மை டில்லிக்கு அழைதுச் சென்று விசாரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் தம்மை யாரும் காப்பாற்றவில்லை எனவும் நான் அவரை காப்பாற்றினல் என்னிடம் விசுவாசமாக இருப்பதாகவும் வாக்களித்தார்.
இதனால் நான் மிகவும் ஆத்திரமடைந்தேன். கட்சிக்கே விசுவாசமாக இல்லாத அவர் என்னிடம் விசுவாசமாக இருப்பதால் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை என தெரிவித்துள்ளேன். இத்தகைய அமைச்சர்களால் அதிமுக தோல்வியை தழுவும். அதே நேரத்தில் அமமுக திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் தொகுதிகளில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும்” என பேசி உள்ளார்.