திருப்பத்தூர்:

ணி அமைச்சர்கள் மணி சேர்ப்பதிலேயே குறிக்கோளாக உள்ளார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்குதல் தொடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டும் அல்ல. தமிழர்களின் தன்மானத்தை காக்கவும் மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும்,மொழி, கலாச்சாரம், மற்றும் தமிழ் மண் ஆகியவற்றை காப்பதற்காக நடக்கின்ற தேர்தல். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மக்களின் முன்னேற்றத்திற்காக எந்த ஒரு திட்டத்தையும் அதிமுக அரசு செய்யவில்லை. குறிப்பாக அமைச்சர்கள் ஊழல் செய்வதிலும் லஞ்சம் வாங்குவதிலும் முதன்மையாக இருந்தனர்.

மத்திய அரசு முத்தலாக் சட்டம் கொண்டு வந்தபோது அதனை ஆதரித்து பாராளுமன்றத்தில் அதிமுக வாக்களித்து. அதிமுக வாக்கு அளிக்கவில்லை என்றால் அந்த சட்டம் நிறைவேறிய இருக்காது. இதன் மூலம் சிறுபான்மை இன மக்களுக்கு அதிமுக துரோகம் இழைத்துள்ளது. மேலும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வாக்களிக்காமல் புறக்கணித்தனர். ஆனால் அதிமுக.,வும் பாமகவும் தான், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தது இதன் காரணமாக அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் தற்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என கூறியுள்ளது. இது சிறுபான்மை இன மக்களை ஏமாற்றும் செயல். தமிழக முதல்வர் பழனிசாமி பச்சை துண்டை போட்டுக்கொண்டு தான் ஒரு விவசாயி எனக் கூறுகிறார், பச்சைத் துண்டு போட்டுக் கொண்டால் விவசாயியா? எனவே வரும் சட்டசபை தேர்தலில் பழனிசாமி தன்னுடைய தொகுதியில் டெபாசிட் கூட வாங்க மாட்டார். சிறுபான்மையின மக்களுக்கு திமுக என்றும் துணையாக இருக்கும். திமுக ஆட்சி அமைந்தவுடன் சிறுபான்மை நலன் காக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறுபான்மையினருக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழகத்தில் மக்களின் நலன் காக்க திமுக தேர்தல் அறிக்கையில் 505 உறுதிமொழிகளை கொடுத்துள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் அவை அனைத்தையும் நிறைவேற்ற திமுக முனைப்புடன் செயல்படும். இந்தியைத் திணித்து நாட்டைப் பிளவுபடுத்த பா.ஜ., முயல்கிறது அது ஒருபோதும் நடக்காது.

இவ்வாறு அவர் பேசினார்.