டில்லி

ன்கொடுமை சட்டத்தின் கீழ் சிலர் தவறான புகார் கொடுப்பதால் அதை மாற்றி அமைக்க வேண்டும் என்னும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அமைச்சர்கள் உட்பட பலரும் மறு ஆய்வு மனு அளித்துள்ளனர்.

வன்கொடுமை சட்டம் என்பது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீது தாக்குதல் அல்லது அவர்களை சாதியின் பெயரை சொல்லி திட்டுதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்க் எதிரான சட்டமாகும்.   வன்கொடுமை சட்டத்தின் கீழ் போடப்படும் வழக்குகளுக்கு விசாரணையின்றி சிறையில் அடைக்க முடியும்.   மேலும் இதற்கு முன் ஜாமீன் கிடையாது.

இந்த வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப் படுவதாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் லலித் மற்றும் கோயல் அடங்கிய அமர்வு இந்த சட்டத்தை கடுமையாக விமர்சித்தது.   ”இந்த சட்டம் பல நேரங்களில்  பழி வாங்குவதற்காக உபயோகப் படுத்தப் படுகிறது.   அதனால்  இந்த வழக்குகளில் முன் ஜாமீன் வழங்கலாம்,  வழக்கை பதிவு செய்யும் முன்பு விசாரணை செய்ய வேண்டும்” எனவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  இது குறித்து ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினர்கள் மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றத்துக்கு அளித்துள்ளனர்.   அதை தொடர்ந்து தற்போது மோடியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ராம் விலாஸ் பாஸ்வான், ராமதாஸ் அதவாலே, மற்றும் தாவர்சந்த் கெகலாத் ஆகியோரும் மறு ஆய்வு மனு அளித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தலித் உரிமை குழுக்கள் மட்டுமின்றி ஆளும் பாஜகவை சேர்ந்த தலித் பாராளுமன்ற உறுப்பினர்களும் கடுமையாக எதிர்த்துள்ளனர்.   காங்கிரஸ் கட்சியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.   இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு தலைமை அரசு வழக்கறிஞர் மூலம் வழக்கு தொடர  வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.