அமைச்சர்கள் தோல்வி.. ஆளும்கட்சிக்கு மக்கள் எச்சரிக்கை!

ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது என்றால், அக் கட்சியின் அமைச்சர்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவதே வழக்கமாக நடப்பது. ஆனால் இந்த முறை போட்டியிட்ட அமைச்சர்களில்  கிட்டதட்ட மூன்றில் ஒரு பங்கு அமைச்சர்கள் தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, அமைச்சராக இருந்தாலும் மறுபடி தேர்தலில் சீட் கிடைப்பது என்பது “அம்மா” புண்ணியம்தான். அப்படி இந்த முறை மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டது 19 அமைச்சர்களுக்குத்தான்.

இவர்களில் 13 பேர் வெற்றி பெற்று நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்க..   6  அமைச்சர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

வளர்மதி - கோகுல இந்திரா - நத்தம் விசுவநாதன்
வளர்மதி – கோகுல இந்திரா – நத்தம் விசுவநாதன்

தோல்வி அடைந்தவர்களில் ஒருவர் சென்னை அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கோகுல இந்திரா. தி.மு.கவுக்கு ஆதரவான தொகுதி என்று கருதப்படும் அண்ணா நகரில் கடந்த முறை போட்டியிட்டு வென்றவர். சிட்டிங் எம்.எல்.ஏ, அமைச்சர் என்கிற கோதாவில் மீண்டும் களம் இறங்கினார்.

ஆனால் கடந்த டிசம்பரில் வந்த வெள்ளம் இப்போது இவரை அடித்துச் சென்றுவிட்டது.

இப்படி தோல்வி அடைந்த அமைச்சர்களில் மிக  முக்கியமானவர் நத்தம் விஸ்வநாதன். இவர்  இந்த முறை வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காகவே இவருக்கு ஆத்தூர் தொகுதியை தலைமை ஒதுக்கியது என்ற ஒரு பேச்சும் முன்பு எழுந்தது. அது எந்த அளவுக்கு உண்மையோ.. நத்தம் தோற்றுவிட்டார்.

தோல்வி அடைந்த மேலும் நான்கு அமைச்சர்கள்: ஓரத்தநாடு – ஆர். வைத்திலிங்கம், ஆயிரம் விளக்கு – பா. வளர்மதி, பாப்பிரெட்டிபட்டி – பி. பழனியப்பன், சங்கராபுரம் – பி.மோகன்.

தொடர்ந்து இரண்டாம் முறையாக அ.தி.மு.க. ஆட்சி பீடம் ஏறுகிறது. ஆனால் கடந்த  2011 சட்டமன்றத் தேர்தலைவிட குறைந்த வாக்குகளையும், சீட்டுகளையுமே மக்கள் அக் கட்சிக்கு அளித்திருக்கிறார்கள். அதுவும் அமைச்சர்கள் ஆறுபேரை தோற்கடித்திருக்கிறார்கள். இது கடந்தகால அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் பிராகரஸ் ரிப்போர்ட்.. ஏன். எச்சரிக்கை என்றே சொல்லலாம்.

ஆகவே இந்த முறை, மக்களுக்கான ஆட்சியை அ.தி.மு.க. தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

கார்ட்டூன் கேலரி