டில்லி:

தேனி நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வந்தது. தமிழகத்தில் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. சமீபத்தில் தேனி குரங்கணி மலைப்பகுதியில் காட்டு தீ ஏற்பட்டு 20 பேர் வரை பலியாயினர்.

இச்சம்பவத்தில் சதி இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. எனினும் நியூட்ரினோ ஆய்வக அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தும் உள்நோக்கத்தோடு காட்டு தீயை ஏற்படுத்தியிருக்கலாம் என்ற தகவலும் பரவியது.

இந்நிலையில் தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி இன்று உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியார் அணையில் இருந்து தினமும் 340 கிலோ லிட்டர் தண்ணீரை இந்த திட்டத்துக்கு பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு இருந்தால் 30 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவு மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமெண்டல் ரிஸர்ச் நிறுவனத்தின் இந்திய நியூட்ரினோ திட்ட இயக்குனர் வி.எம்.தாதருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.