மும்பை: ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில், சந்தேகத்திற்குரிய ஏற்றுமதியாளர்களின் ஏற்றுமதி சரக்குகளை முழுமையாக ஆய்வுசெய்யும் நடைமுறையை சிறிதுசிறிதாக தளர்த்துவதற்கு மத்திய நிதி அமைச்சகம் முடிவுசெய்துள்ளது.

அதாவது, முந்தைய சோதனைகளில் எந்த முறைகேடுகளும் கண்டறியப்படவில்லை எனில், அத்தகைய ஏற்றுமதியாளர்களின் சரக்குகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; போலியான விவரப்பட்டியல்கள் மூலம் சில ஏற்றுமதியாளர்கள் ஜிஎஸ்டி வரியை திரும்பக் கோரியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து சந்தேகத்திற்கு உரிய ஏற்றுமதியாளர்களின் சரக்குகளை முழுமையாகப் பிரித்து ஆய்வுசெய்ய சிபிஐசி அமைப்பை முடிவு செய்தது.

ஆனால், இந்த செயல்பாட்டினால், தங்களின் சரக்குகள் தாமதமாக போய் சேருவதாகவும், மறு பேக்கிங் செய்வதற்கு கூடுதல் கட்டணம் செலவு செய்ய வேண்டியுள்ளதாகவும் வணிகர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, முந்தைய சோதனைகளில் முறைகேடுகள் கண்டறியப்படாத வணிகர்களின் சரக்குகளை மட்டும் சோதனை செய்யாமல் அனுமதிப்பது என்ற நடைமுறையை கொண்டுவர நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.