டில்லி

பொருளாதாரக் குற்றம் இழைத்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடியவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய ஒப்புதல் அளிக்கும் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வங்கிகளில் கடன் வாங்கிச் செலுத்தாதோர், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் மோசடி செய்வோர் உள்ளிட்டோர் பொருளாதாரக் குற்றவாளிகள் என கருதப் படுகின்றனர்.   இவ்வாறு குற்றமிழைப்போரில் பலர் தண்டனைக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர்.   அவர்களிடம் இருந்து அவர்கள் மோசடி செய்த பணத்தை திரும்பப் பெறுவது அரசுக்கு மிகவும் கடினமாக உள்ளது.

இது குறித்து அரசு ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தது.    கடந்த மார்சி மாதம் 12ஆம் தேதி கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் பாராளுமன்றம் முடங்கிப் போனதால் அமச்சரவையால் ஒப்புதல் வழங்க இயலாமல் இருந்தது.  நேற்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.   அந்தக் கூட்டத்தில் அமைச்சரவை இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போது ஜனாதிபதியின் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தச் சட்டம் ஜனாதிபதி ஒப்புதல் அளித்தபின் அமுலுக்கு வர உள்ளது.   இந்தச் சட்டத்தின் படி பொருளாதாரக் குற்றம் இழைத்து விட்டு நாட்டை விட்டு ஓடிய குற்றாவாளிகளின் சொத்துக்களை அரசுக்கு ஜப்தி செய்யும் உரிமை வழங்கப்பட உள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் ஒரு அதிகாரி நீதிமன்றத்தில் பொருளாதாரக் குற்றம் இழத்தவர்கள் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும்.   நீதிமன்றம் ஒப்புதல் அளித்த பின் அவருடைய சொத்துக்களை அரசு ஜப்தி செய்யும்.   அவ்வாறு ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை ஏலத்தில் விற்று வரும் தொகையை குற்றவாளிகள் மோசடி செய்த பணத்துக்கு இழப்பீடாக அரசு எடுத்துக் கொள்ளலாம்.

இந்த சட்டம் போலிமுத்திரைத்தாள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்தல்,   போதுமான பணம் வங்கியில் இல்லாத போது காசோலை அளித்தல்,  பணமோசடி உள்ளிட்ட பல குற்றங்களுக்கும் பொருந்தும் என கூறப்படுகிறது.    மேலும் பொருளாதாரக் குற்றங்கள் இழைத்து விட்டு நாட்டை விட்டு ஓடுபவர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் மட்டுமின்றி அவருடைய குடும்பத்தினரின் சொத்துக்களையும் ஜப்தி செய்ய அரசுக்கு இந்த சட்டம் உரிமை வழங்குகிறது.