இந்தியா சிறுபான்மையினர் நலனைப் பேணும் முன்மாதிரியான நாடு ஆனால் இங்கும்கூட சில நேரங்களில் சிறுபான்மையினர் தங்களை இரண்டாந்தர குடிமக்களாக உணர்கின்றனர் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியிருக்கிறார்.

nakqvi

டெல்லியில் நடந்த சிறுபான்மையினர் தேசிய கமிஷன் ஆண்டுவிழாவில் பேசிய மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, பாஜக சிறுபான்மையினர் நலனுக்காக போராடும் ஒரு கட்சியாகும், இந்தியாவும் சிறுபான்மையினர் நலனைப் பேணுவதில் முன்மாதிரியான நாடு. அண்டை நாடுகளில் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதத்தைப் பார்த்தால்தான் உங்களுக்கு இந்தியாவின் அருமை புரியும். ஆனாலும் இங்கும்கூட சில நேரங்களில் சிறுபான்மையினர் தங்களை இரண்டாந்தர குடிமக்களாக உணர்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் சிறுபான்மையினருக்கு சம உரிமைகளை கொடுத்தாலும் அந்த சமத்துவத்தை உணர்வதில் நடைமுறையில் சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றது. உண்மைகள் எப்போதுமே குழி தோண்டி புதைக்கப்படுகின்றன என்றார்.
மேலும் அவர் பேசியபோது, இந்திய முஸ்லீம்கள் நாட்டுப்பற்று மிக்கவர்கள். அவர்கள் நாட்டுப்பற்றைப் பற்றி யாரும் சான்றிதழ் கொடுக்க வேண்டிய அவசியமில்லை அதனால்தான் சில இஸ்லாமிய பழமைவாத இயக்கங்களால் இந்தியாவில் வேரூன்ற முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.