கேரள கன மழை – 2 இளம் சகோதரிகளின் சோக முடிவு!

நிலாம்பூர்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில், 8 மற்றும் 4 வயதுடைய இரண்டு சகோதரிகள் சிக்கி மரணமடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும் ஒரே சவக்குழியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விக்டர் மற்றும் தாமஸ் ஆகிய இரண்டு சகோதரர்கள் தங்களின் குடும்பத்தினருடன் மிகச்சிறிய கவலப்பாரா கிராமத்தில் வசித்து வருகிறார்கள். இது ஒரு மலை கிராமம். அவர்களின் வீடு, அக்கிராமத்தில் இருக்கும் மொத்தம் 40 வீடுகளில் மிகவும் உயரத்தில் அமைந்த வீடாகும்.

இந்த சகோதரர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள். அவர்களில் இறந்துபோன சகோதரிகளான அனகா மற்றும் அலீனா ஆகியோரும் அடக்கம். நிலச்சரிவு ஏற்பட்டபோது தாமஸ் வீட்டில் இல்லை. விக்டர், இரண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளே இருந்தனர். நிலச்சரிவு ஏற்பட்டபோது, பெரியவர்கள் மூவராலும் 3 குழந்தைகளை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.

அனகா மற்றும் அலீனா ஆகிய இருவரும் மண்ணுக்குள் புதைந்தனர். அவர்களை நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்க முடிந்தாலும், அக்கிராமத்தில் வேறு எந்த வசதிகளோ இல்லாத காரணத்தாலும், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டதாலும் உயிருக்குப் போராடிய அக்குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை. எனவே, காப்பாற்ற வாய்ப்பிருந்தும் பரிதாபமாய் இறந்துபோயினர் அந்த இளம் சகோதரிகள்.

எப்போதுமே இரவில் அருகருகே கட்டிப்பிடித்து உறங்கும் அந்த இளம் குழந்தைகள் இருவரும், ஒரே சவக்குழியில் அடக்கம் செய்யப்பட்டனர்.