பெங்களூரு

வாக்கு பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும் வாக்கு ஒப்புகை இயந்திரத்தில் பதிவான வாக்குகளுக்கும் இடையில் வித்யாசம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 12ஆம் தேதி கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்தது.   இந்த தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரமும்,  வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரமும் உபயோகப்படுத்தப் பட்டன.    நேற்று இந்த தேர்தலில்  பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் வெளியாகி உள்ளன.    பாஜக அதிக இடம்  பெற்றும் அறுதிப் பெரும்பான்மை பெறாத நிலையில் உள்ளது.   காங்கிரஸ் – மஜத இணைந்து அரசமைக்க ஆலோசித்து வருகிறது.

பாரதி ஜெயின்

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான பாரதி ஜெயின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.    அவருடைய தகவல்கள் எப்போதுமே உண்மையாக இருக்கும் என அவருடைய ஃபாலோயர்ஸ் தெரிவிப்பது வழக்கம்.

பாரதி ஜெயின் தனது டிவிட்டர் பதிவில், “கர்நாடக மாநிலத்தில் வாக்குப் பதிவு எண்ணிக்கைக்கும் வாக்கு ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கைக்கும் வித்தியாசம் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.  இது வழக்கமான நிகழ்வு அல்ல.  இது குறித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரியின் விளக்கம் விரைவில் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என பதிந்துள்ளார்.

இந்தப் பதிவு மக்களிடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது.