Random image

மியான்மர் மர்மம் : 9 ஆண்டுகளுக்கு முன் மாயமான கப்பல் மீண்டும் வந்தது.

தாமா சேட்டா, மியான்மர்

சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு மாயமாக மறைந்து போன கப்பல் மீண்டும் தானாகவே வந்துள்ளது.

ஆசியக் கடலில் பலமுறை எதிர்பாராத விதமாக ஆளில்லா படகுகளும் கப்பல்களும் தென்படுவது வழக்கமாகி வருகிறது.   இவைகளில் ஒரு சில படகுகளில் பிணங்கள் மட்டும் இருப்பதும் உண்டு.   கடந்த 2015 ஆம் வருடம் ஜப்பான் நாட்டை ஒட்டிய கடல் பகுதியில் 11 படகுகள் யாரும் செலுத்தாமல் மிதந்து வந்தன.   அதில் சில படகுக்ளில் இறந்தவர்களின் சடலங்கள் இருந்தன.    அந்த படகுகள் குறித்து இன்று வரை எந்த விவரமும் அறியப்படவில்லை.

கடந்த 2009 ஆம் ஆண்டு தைவான் கடற்பகுதியில் இந்தோனேசியக் கொடியுடன் ஒரு கப்பல் சென்றுக் கொண்டிருந்தது.    “சாம் ரதுலாங்கி பி பி 1600” எனப் பெயரிடப்பட்ட அந்தக் கப்பல் திடீரென அனைத்து தொடர்புகளையும் இழந்தது.   அதை எங்கு தேடியும் கிடைக்காததால் அதிகாரிகள் அந்த கப்பல் கடலில் மூழ்கி இருக்கலாம் என முடிவுக்கு வந்தனர்.

சுமார் 3 நாட்கள் முன்பு அதாவது ஆகஸ்ட் 30 ஆம் தேதி அன்று மியான்மர் நாட்டின் தாமா சேட்டா என்னும் பகுதியை சேர்ந்த மீனவர்கள் அந்நாட்டு கடலில் காணாமல் போன கப்பல் மிதந்துக் கொண்டு இருந்ததை கண்டுள்ளனர்.   கடற்கரையில் இருந்து சுமார் 11 கிமீ தூரத்தில் இருந்த இந்த கப்பலுக்கு சென்ற மீனவர்கள் கப்பலுக்குள் இறங்கி உள்ளனர்.  அந்த கப்பலில் மக்களோ அல்லது எந்த பொருளுமோ இல்லாமல் காலியாக இருந்துள்ளது.

இது குறித்து கடற்படைக்கும் கடலோரக் காவல்துறைக்கும் புகார் அளிக்கப்பட்டது.   அவர்கள் வந்து சுமார் 177.35 மீட்டர் நீளமும் 27.91 அகலமும் உள்ள இந்த கப்பலை சோதனை இட்டுள்ளனர்.   கந்த 2001 ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த கப்பல் சுமார் 26,510 டன்கள் எடை உள்ளதாகும்.    மீனவர்களால் பேய்க்கப்பல் என கூறப்படும் இந்த கப்பல் இத்தனை நாட்கள் எங்கிருந்தது என்பது குறித்து எதுவும் விவரங்கள் தெரியவில்லை.