Random image

பொறாமை பிடித்த சக ஊழியரால் கொல்லப்பட்ட வங்கி அதிகாரி

மும்பை

காணாமல் போன எச்டிஎஃப்சி வங்கிஅதிகாரி சித்தார்த் சங்வி தனது சக ஊழியரால் கூலிப்படை மூலம் கொல்லப்பட்டது தற்போது தெரிய வந்துள்ளது.

புகழ் பெற்ற தனியார் வங்கியான எச்டிஎஃப்சி வங்கியின் துணைத்தலைவரான சித்தார்த் சங்வி பணி புரிந்து வருகிறார்.   இவர் கடந்த புதன்கிழமையில் இருந்து காணாமல் போய் உள்ளார்.   மும்பையின் லோயர் பரேல் பகுதியில் அமைந்துள்ள கமலா மில்ஸ் வளாகத்தில் இவர் அலுவலகம் உள்ளது.   இந்த அலுவலகத்தில் இருந்து இவர் தனது கார் நிறுத்தப்பட்ட இடத்துக்கு செல்வது வரை கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.

 

புதன் இரவு வெகு நேரமாகியும் சங்வி வீட்டுக்கு வராததால் அவர் மனைவி காவல்துறையிடம் புகார் அளித்தார்.   அவருடன் அவருடைய காரும் காணாமல் போய் இருந்தது.   காவல்துறையினர் தீவிரமாக தேடியதில் அவருடைய கார் கோபார்கரைன் அருகில் இருந்த ஒரு குடியிருப்பு பகுதியில் நிறுத்தபட்டிருந்தது.   அந்த காரில் இரத்தக்கறையுடன் ஒரு கத்தி கிடைத்தது.

மேலும் விசாரித்ததில்  20 வயது இளைஞர் ஒருவர் அந்த காரை நிறுத்தி விட்டு சென்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.   அந்த இளைஞரை அங்கிருந்த கண்காணிப்பு காமிரா மூலம் கண்டுபிடித்து விசாரித்ததில் அந்த இளைஞர் சிக்வியை கொன்று உடலை மறைத்து வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.    உடல் எங்கு மறைக்கப்பட்டது என்பது இன்னும் சரிவர தெரியவில்லை.

சிங்வி உடன் பணி புரியும் ஒரு ஊழியர் இவருக்கு துணைத்தலைவராக பதவி உயர்வு கிடைத்ததால் பொறாமை அடைந்துள்ளார்.  அவர் இந்த இளைஞர் உட்பட நான்கு பேரை  சிங்வியை கொலை செய்ய கூலிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.   காவல்துறையினர் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மீதமுள்ள மூவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.