குவாலியர் :

த்தியபிரதேச மாநிலம் குவாலியரில் துணை காவல்துறை கண்காணிப்பாளர்களாக பணிபுரியும் (டி.எஸ்.பி.) ரத்னேஷ் சிங் தோமரும், விஜய் சிங் சவுதாரியும் சில தினங்களுக்கு முன்னர் ஒரு திருமணத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

குவாலியரில் உள்ள நடைபாதையில் பரட்டை தலையுடன், குளிரில் நடுங்கிய படி பிச்சைக்காரன் போல் ஒருவர் அமர்ந்திருப்பதை பார்த்துள்ளனர்.

காரில் இருந்து கீழே இறங்கிய இருவரும், அந்த நபருக்கு தாங்கள் வைத்திருந்த சட்டையை கொடுத்து அணிவிக்க செய்தனர். அந்த சட்டையை போட்டுக்கொண்ட நபர், இரு டி.எஸ்.பி.க்களையும் வைத்த கண் வாங்காமல் சிறிது நேரம் பார்த்துக்கொண்டே இருந்தார்.

பின்னர் “நீங்கள் ரத்னேஷும், விஜய்யும் தானே?” என அந்த நபர் ஈனஸ்வரத்தில் கேட்க, இருவருக்கும் ஆச்சர்யம்.

“எங்கள் பெயர் உனக்கு எப்படி தெரியும்?” என அவர்கள் வியப்புடன் விசாரிக்க,

அந்த நபர் “நான் தான் மனீஷ் மிஸ்ரா” என அவர் நா குழறிய படி சொல்ல, இரு டி.எஸ்.பி.க்களும் அதிர்ந்து போனார்கள் என்று சொல்வதை விட துடித்து போனார்கள் என்றே சொல்ல வேண்டும்.

ஏன்?

பிச்சைக்காரரை போல் சாலையில் கிடந்த அந்த மனீஷ் மிஸ்ரா, அவர்களின் நண்பர். இன்ஸ்பெக்டராக இருந்தவர்.

1999 ஆம் ஆண்டு மூவரும் மத்தியபிரதேச மாநில காவல் துறையில் இன்ஸ்பெக்டர்களாக பணியில் சேர்ந்தனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு தாதியா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்த போது மிஸ்ரா காணாமல் போயிருந்தார்.

குடும்ப பிரச்சினைகளால் அவரது மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது. வீட்டில் வைத்து மிஸ்ராவுக்கு வைத்தியம் பார்த்த நிலையில் ஒருநாள் மாயமானார். 15 ஆண்டுகளாக தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தான், டி.எஸ்.பி.க்களாக பதவி உயர்வு பெற்றிருந்த தோமரும், சவுதாரியும், தங்கள் சகாவை, பரட்டை தலை, அழுக்கு உடம்புடன் நீண்ட காலத்துக்கு பிறகு பார்த்ததும் நிலை குலைந்தனர். குவாலியரில் தொண்டு நிறுவனம் நடத்தும் இல்லத்தில் மிஸ்ராவை சேர்த்துள்ளனர்.

“மிஸ்ராவை என்ன செலவானாலும் குணப்படுத்தி, அவரை பழைய நிலைக்கு ஆளாக்குவோம்” என இரண்டு டி.எஸ்.பி. நண்பர்களும் சபதம் செய்துள்ளனர்.

மிஸ்ரா, தடகள போட்டியில் பல பரிசுகள் பெற்றவர். துப்பாக்கி சுடும் வீரரும் ஆவார். அந்த கோட்டாவில் தான் அவருக்கு போலீஸ் வேலை கிடைத்தது.

– பா. பாரதி