தெலுங்கானா : காணாமல் போன திருநங்கை வேட்பாளர் காவல்நிலையத்தில் ஆஜர்

தராபாத்

நேற்று முன் தினம்  காணாமல் போன தெலுங்கானா திருநங்கை வேட்பாளர் காவல் நிலையத்தில் தனது வழக்கறிஞருடன் ஆஜர் ஆனார்.

தெலுங்கானாவில் சட்டப்பேரவையில் போட்டியிடும் ஒரே திருநங்கை வேட்பாளரான சந்திரமுகி ஐதராபாத் நகரில் பஞ்சாரா ஹில் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன் தினம் இவர் திடீரென காணாமல் போனார். இவரது திருநங்கை தோழிகள் இவரை கடத்தி இருக்கலாம் என அபிப்ராயம் தெரிவித்தனர். காவல்துறையினர் சந்திரமுகியை தீவிரமாக தேடத் தொடங்கினர்.

அதை ஒட்டி அவரது வீட்டில் இருந்த சிசிடிவி பதிவை காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த பதிவில் சந்திரமுகி தானாகவே வீட்டை விட்டு தனியே வெளியேறியது தெரிய வந்தது. அத்துடன் அவர் தன்னை யாரும் அடையாளம் காணாமல் இருக்க முகத்தை மூடியபடி சென்றதும் தெரிய வந்தது. அவரை கண்டுபிடிக்க காவல்துறையினர் 10 குழுக்கள் அமைத்து தேடி வந்தனர்.

சந்திரமுகி போட்டியிடும் பகுஜன் இடது அணியினரும் அவரது திருநங்கை தோழிகளும் அவர் காணாமல் போனதற்கு பின்னணியில் அவரை எதிர்த்து போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் இருக்கக் கூடும் என சந்தேகம் தெரிவித்தனர். நேற்று திடீரென அவர் தனது வழக்கறிஞருடன் நள்ளிரவு நேரத்தில் பஞ்சாரா ஹில் காவல்நிலையத்துக்கு வந்தார். தாம் காணாமல் போனது குறித்து எந்த தகவலும் அளிக்க சந்திரமுகி மறுத்துள்ளார். இது குறித்த விவரங்களை அவர் நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறி உள்ளார்.