நியூஸ்பாண்ட்:

டில்லி சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரதமர் மோடியை சந்தித்திருக்கிறார். அரசின் நலத்திட்டங்கள் குறித்து இந்த சந்திப்பு நிகழ்வதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால், “அரசு செலவில் சென்றாலும் இது அரசு முறை பயணம் அல்ல. உட்கட்சி பூசலில்  தீர்வு காணவே பிரதமரை சந்திக்க டில்லி சென்றிருக்கிறார் ஓ.பி.எஸ்.” என்கிறார்கள்.

 

இது குறித்து கூறப்படுவதாவது:

“அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசலில் தலைவிரித்தாடியபோது, “ஈ.பி.எஸ். தலைமையிலான ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது” என்று “தர்மத்தின்” குரலாக ஓ.பி.எஸ். முழங்கிக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், மத்திய பாஜக அரசின் “வழிகாட்டலின்படி”  “உடன்பாடு” ஏற்பட்டு இரு அணிகளும் இணைந்தன. ஓ.பி.எஸ். துணை முதல்வர் ஆனார்.

ஆனால் அவரும் அவரது அணியினரும் அதிருப்தியில் இருக்கிறார்கள். காரணம், “உடன்பாட்டின்போது ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்கள் எதையும் ஈ.பி.எஸ். செய்துதரவில்லை” என்பதுதான்.

ஓ.பி.எஸ். தரப்பினர், “எங்கள் தலைவர் துணை முதல்வராக இருந்தும் கூட அரசின் முக்கிய முடிவுகளில் அவரை கலந்து ஆலோசிப்பதே இல்லை. முக்கியமான பல கோப்புகள் அவரது  பார்வைக்கே அனுப்பப்படுவது இல்லை” என்று புலம்புகிறார்கள்.

சமீபத்தில் பெரும் ஒப்பந்தம் ஒன்று ஓ.பி.எஸ்.  பார்வைக்கே வராமல் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக கோட்டை வட்டாரங்களும் இதற்கு கட்டியம் கூறுகின்றன.

மேலும், ஓ.பி.எஸ். அணியினர் எதிர்பார்த்த சில அமைச்சகங்கள் அவர்களுக்கு இன்னமும் ஒதுக்கப்படவில்லை என்ற ஆதங்கமும் அவர்களுக்கு இருக்கிறது.

தவிர கட்சி விவகாரங்களிலும் ஓ.பி.எஸ்ஸை சேர்ப்பதில்லை என்பதும் அவரது அணியினரின் புகாராக இருக்கிறது.

இது குறித்து அவரது அணியினர், “கட்சியை வழி நடத்தும் குழுவை அமைத்தார்கள் என்றாலும் அது ஏட்டளவிலேயே இருக்கிறது. கட்சி விவகாரங்களில் ஓ.பி.எஸ். புறக்கணிக்கப்படுகிறார்.

இரட்டை இலை குறித்த விவகாரம் தேர்தல் கமிசனில் இருக்கிறது. இது குறித்துகூட ஓ.பி.எஸ்ஸிடம் கலந்து பேசாமல் அமைச்சர் ஜெயக்குமார் மூலமாக தன்னிச்சையாக செயல்படுகிறார் ஈ.பி.எஸ்.

புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவியேற்பு அன்றும் தான் அவமானப்படுத்தப்பட்டதாக ஓ.பி.எஸ். நினைக்கிறார். அதாவது ஆளுநர் அருகில் ஓபிஎஸ் அழைக்கப்படவில்லை.

ஆக மொத்தத்தில் ஆட்சி, கட்சி இரண்டிலும் ஓ.பி.எஸ். ஒதுக்கப்படுகிறார்.

இது குறித்து பிரதமரிடம் புகார் அளிக்கவே ஓ.பி.எஸ். பிரதமரை சந்தித்தார்” என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

ஓ.பி.எஸ்.  கலக்கத்துக்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.

அதாவதி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களில் ஓ.பி.எஸ்ஸை போனால் போகிறது என்கிற அளவில்தான் ஈ.பி.எஸ். சேர்த்துக்கொண்டார். குறிப்பாக  ஈ.பி.எஸ். தனது சொந்த தொகுதியான சேலத்தில் எம்.ஜி.ஆர். விழா என்ற பெயரில் பெரும் கூட்டத்தைத் திரட்டினார். டி.டி.வி.தினகரனுக்குர சவால் விட்டார்.

அவருடைய பேச்சைக் கேட்டு தினகரன் அச்சப்பட்டாரோ இல்லையே… ஓ.பி.எஸ். பயந்துவிட்டார்.

“இரட்டை இலை கிடைக்கும் வரை நம்முடன் இணக்கமாக இருந்து, கிடைத்தவுடன் நம்மை கழற்றிவிட்டுவிடுவாரோ” என்று ஈ.பி.எஸ். குறித்து ஓ.பி.எஸ். பயப்பட ஆரம்பித்துவிட்டார்.

இதையடுத்துத்தான், தனது செல்வாக்கை காண்பிக்க, வரும் நவம்பர் -5 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை தன் தலைமையில் நடத்த முடிவு செய்திருக்கிறார் ஓ.பி.எஸ்.

இந்த நிலையில்தான் பிரதமரை சந்தித்து புகார் படலம் வாசிக்க டில்லி கிளம்பினார். மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகிய, தனது ஆதரவாளர்களுடன் டில்லி சென்று பிரதமரிடம் முறையிடுவதுதான் ஓ.பி.எஸ்.ஸின் திட்டம்.

ஆனால் அதற்கும் செக் வைத்தார் முதல்வர் ஈ.பி.எஸ்.

தனது ஆதரவாளரான மின்துறை அமைச்சர் தங்கமணியையும் உடன் அனுப்பிவைத்தார். மேலும், தமிழக அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய அனுமதி கேட்கும் மனு ஒன்றும் முதல்வர் அலுவலகத்தில் இருந்து தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டது.  அதாவது இதற்காகத்தான் ஓ.பி.எஸ். பிரதமரை சந்திக்கிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முதல்வர் தரப்பு விரும்பியது.

ஆனால் பிரதமரை சந்திக்கும்போது அமைச்சர் தங்கமணியை தவிர்த்துவிட்டார். ஓ.பி.எஸ்.

ஓ.பி.எஸ்ஸும் மைத்ரேயனும் மட்டுமே பிரதமரை சந்தித்தார்கள்.

பிரதமரை சந்தித்து வந்த ஓ.பி.எஸ். செய்தியாளர்களிடம், “நிலக்கரி இறக்குமதி அனுமதிக்காக கோரிக்கை வைத்தேன்” என்றார். , “அப்படியானால் மின்துறை அமைச்சர் தங்கமணியை ஏன் அழைத்துச் செல்லவில்லை” என்று செய்தியாளர்கள் கேட்க.. “அவர் மத்திய மின்துறை அமைச்சரை பிற்பகல் சந்திக்க இருக்கிறார் தங்கமணி”என்று சமாளித்தார் ஓபி.எஸ்.

பிரதமருடனான சந்திப்பின்போது, தான் ஒதுக்கப்படுவதையும் “உடன்பாட்டின்போது” ஏற்றுக்கொள்ளப்பட்ட விசயங்களையும்  நிறைவேற்றவில்லை என்று தனது ஆதங்கத்தைக் கொட்டினார். எல்லாவற்றையும் பிரதமர் மவுனமாகக் கேட்டுக்கொண்டார்.

இன்னொரு விசயம்… தேனியில் ஓ.பி.எஸ். நடத்தும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள பிரதமருக்கு அழைப்பு விடுத்தார் ஓ.பி.எஸ்.  சென்னையில் நடைபெற இருக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் கலந்துகொள்வார் என்றுதான் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் மற்றும் கடம்பூர் ராஜூ ஆகியோர் சொல்லி வந்தார்கள். இந்த நிலையில் ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தவிர, “தேனியில் ஓ.பி.எஸ். நடத்தும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில்தான் பிரதமர் கலந்துகொள்வார்” என்று இப்போது ஓ.பி.எஸ். அணியினர் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

ம்… ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். இடையேயான இந்த “தர்மயுத்தத்தில்” யார் வெற்றி பெறுவார்களோ.. பார்ப்போம்!