செங்கோட்டையனுடன் லடாய்? பள்ளி கல்வித்துறை இயக்குனர்கள் 3 பேரும் அதிரடி மாற்றம்!

சென்னை:

மிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் 3 பேரும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக பள்ளிக் கல்வித்துறையில்  அமைச்சருக்கு தெரியாமலேயே பல்வேறு அறிவிப்பு கள், நடவடிக்கைகள் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து  வெளியாகி வந்த நிலையில், இன்று  பள்ளி கல்வி இயக்குனர்கள் 3 பேரும் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர். இது பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழக கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார் அமைச்சர் செங்கோட்டையன். ஆனால், அவரது பல்வேறு அறிவிப்புகள் செயல்படுத்தப்படாமல் பேச்சு மொழி அளவிலேயே நீடித்து வருகிறது.

செங்கோட்டையனின் அறிவிப்புகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு வருவதாகவும், அதிகாரி களே தன்னிச்சையாக செயல்பட்டு, பல்வேறு சுற்றறிக்கைகளை வெளியிட்டு வந்ததாகவும் புகார் எழுந்தது.

கடந்த மாதம்,  மாணவர்களின் கைகளில் கட்டப்படும் கயிறு விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம்  அமைச்சருக்கு தெரியாமலேயே  பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்கள் யாரும் கைகளில் எந்தவொரு கயிறும் கட்டக்கூடாது என  அறிவித்தது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் பாஜக உள்பட சில அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து, அந்த உத்தரவை ரத்து செய்த அமைச்சர், தனக்கு தெரியாமல் உத்தரவை பிறப்பித்த கல்வித்துறை அதிகாரிகளை கடிந்துகொண்டதாகவும்  கூறப்பட்டது.

அதுபோல, தற்போது காலாண்டு விடுமுறையில், பள்ளிகள் செயல்படும் என்றும் ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

ஆனால், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், அப்படி யெல்லாம் கிடையாது, காலாண்டு விடுமுறை உண்டு, பள்ளிகளுக்கு விடுமுறை  என்று அறிவித்தார். இந்த விவகாரமும் சர்ச்சையானது.

அமைச்சரின் பேச்சை செவிமடுக்காமல், கல்வித்துறை அதிகாரிகள், காலாண்டு விடுமுறை யின்போது, ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று மீண்டும், தலைமையாசிரியர் களுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும், அதன்படி காலாண்டு விடுமுறையின்போது தினசரி ஒரு ஆசிரியர் மற்றும் ஒருவகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை உள்பட அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் விடுமுறை நாளின்போது டர்ன்டூட்டி போடப்பட்டு உள்ளது.

இது ஆசிரியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்வி அமைச்சர் விடுமுறை என்று கூறிய நிலையில் அதிகாரிகள் பள்ளிகள் செயல்படும் என்று மீண்டும் அறிவித்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரின் அறிவிப்பை மதிக்காமல் கல்வித்துறை உயர் அதிகாரிகள் செயல்படுவது  இதன்மூலம் மீண்டும் வெட்ட வெளிச்சமானது.

இது ஆசிரியர்கள் மட்டுமின்றி, அமைச்சர்கள் மட்டத்திலும், அதிமுக வட்டாரத்திலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  இன்று பள்ளி கல்வி இயக்குனர்கள் 3 பேரும் அதிரடியாக பணிமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அரசாணையில், ஆளுநர் உத்தரவின்படி பணிமாற்றம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் இயக்குனராக இருந்த ராமேஸ்வர முருகன் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குனர் பொறுப்புக்கு மாற்றப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இயக்குனராக இருந்த சேதுராம வர்மா தொடக்கக்கல்வி இயக்ககத்தின் இயக்குனராகவும், ஏற்கனவே தொடக்க கல்வி இயக்ககத்தின் இயக்குனராக இருந்த கருப்பசாமி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககத்தின் இயக்குனர் பொறுப்புக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

இது நிர்வாக நலன்கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கை எனவும் அந்த ஆணையில் பள்ளிக்கல்வித் துறை விளக்கமளித்துள்ளது. கடந்த 6 மாதங்களில் ராமேஸ்வர முருகன் இரு முறை பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Misunderstanding with the Minister Sengottaiyan, School Education Directors  Transferred, Tamil Nadu School Education, Tamil Nadu School Education Directors Transferred
-=-