இந்தியப் பெண்கள் கிரிக்கெட் நட்சத்திரம் மிதாலி ராஜ் பகிர்ந்துள்ள புகைப்படம் கூறுவதென்ன..?

மும்பை: ‍பெண்கள் டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆடுவதை ஒட்டி, சேலையுடன் தான் பேட்டிங் செய்யும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து பரபரப்பை கிளப்பியுள்ளார், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் மிதாலி ராஜ்.

இவர் கடந்த 2017ம் ஆண்டின் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணியை இறுதிப்போட்டி வரை இட்டுச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படத்தில், சேலை அணிந்து களத்தில் இறங்கி, பேட்டிங் ஆடுகிறார். அந்தப் படம் பெரியளவில் வைரல் ஆகியுள்ளது.

இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ள அவர், இந்தியப் பெண்கள் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், கோப்பையை வென்று வருமாறும் உற்சாகப்படுத்தியுள்ளார். மேலும், பெண்ணாக இருப்பதன் பெருமையையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிவரும் மிதாலி ராஜ், நீண்டகாலம் களத்தில் இருக்கும் வீராங்கனை என்ற சாதனையையும் வைத்துள்ளார். பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை என்ற கவுரவத்தைப் பெற்றுள்ள இவர், கடந்த 2019ம் ஆண்டுதான் டி-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.