கோலி மற்றும் ரோஹித்தை மிஞ்சிய மிதாலி ராஜ் – டி20 போட்டியில் அதிக ரன்கள் எடுத்து சாதனை!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த விராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையாகத் திகழ்பவர் மிதாலி ராஜ். தற்போது நடைபெற்று வரும் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை டி20 தொடரிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

mitali

வியாழக்கிழமை அயர்லாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் மிதாலி ராஜ் 51 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையையும் மிதாலி ராஜ் பெற்றிருக்கிறார்.

ஆண்கள் கிரிக்கெட் அணியில் ரன் குவிக்கும் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரைவிடவும் அதிக ரன்களைக் குவித்திருக்கிறார். இதுவரை நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் 2283 ரன்கள் குவித்துள்ளார். ஆனால் ரோஹித் சர்மா 2207 ரன்களும் கோலி 2102 ரன்களும் மட்டுமே எடுத்துள்ளனர்.

இந்த மூன்று பேரில் மிதாலியும், ரோஹித்தும் 80 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளனர். கோலி 58 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.