மெக்சிகோ: அமெரிக்கர்கள் மெக்சிகோ நாட்டிற்குள் நுழையக்கூடாது என்று மெக்சிகோ நாட்டினர் நடத்தும் போராட்டமானது வரலாற்றின் விசித்திரமாக மாறியுள்ளது.

அமெரிக்கா – மெக்சிகோ எல்லைப்பகுதி என்பது மிக நீண்ட எல்லைப்பகுதியாகும். இதனால், காலங்காலமாக, பல்வேறு நாட்டினர்(மெக்சிகோ நாட்டினர் உட்பட) மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக நுழைய முற்படுவதும், அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவதும் வாடிக்கையான ஒன்று.

மேலும், மெக்சிகோ எல்லையில் பெரிய சுவர் கட்டும் பணியையும் துவக்கினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இந்நிலையில், தற்போதைக்கு உலகளவில் கொரோனா நோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது அமெரிக்கா.

இதனால், அங்கிருக்கும் கொரோனா தாக்கம் மெக்சிகோவிலும் பரவி விடுமோ என்ற அச்சம் மெக்சிகோ நாட்டவரிடையே ஏற்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தின் அருகே, தங்கள் நாட்டு எல்லைக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட மெக்சிகோ மக்கள், “அமெரிக்கர்களை மெக்சிகோ எல்லைக்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது. அங்கிருந்து வரும் அனைவருக்கும் முறையான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டும்” என்றனர் அம்மக்கள்.

மேலும், “மெக்சிகோ எல்லையை மூடுங்கள். அமெரிக்கர்களே வீட்டிலேயே இருங்கள்” என்ற பதாகைகளை ஏந்தியபடியும் நின்றிருந்தனர். இதையடுத்து, அமெரிக்கர்கள் நுழைய முடியாதபடி, மெக்சிகோவின் எல்லைகளை மூடும் பணிகள் துவங்கியுள்ளன.

சர்வதேச உறவுகளில் ஒரு விசித்திர வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ்!