மதம், அரசியல் இரண்டையும் ஒன்றாக இணைத்தது தவறு: மகா. முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கருத்து

--

மும்பை: மதத்தையும், அரசியலையும் ஒன்றாக இணைத்தது பெரும் தவறு என்று மகாராஷ்டிர முதலமைச்சரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறார்.

மகாராஷ்ராவில் பெரும் தடைகளை தாண்டி சிவசேனா, காங். என்சிபி ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. அரியணையில் அமர்ந்தது முதலே, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந் நிலையில்,அரசியலையும், மதத்தையும் தொடர்புடுத்தியது பெரும் தவறு என்று  கூறியிருக்கிறார். மகாராஷ்டிரா சட்டசபையில் ஆளுநர் உரை மீது பேசிய போது அவர் இதை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: அரசியல் என்பது சூதாட்டம் என எங்களுக்கு இப்போது தான் புரிகிறது. அரசியலையும், மதத்தையும் ஒன்றாக இணைத்து பார்த்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம்.

3 கட்சிகள் அடங்கிய இந்த கூட்டணி அரசு நிலைக்கும். மனதால் ஒன்றிணைந்து கைகோர்த்திருக்கிறோம். இந்த அரசு ஒரு புல்லட் ரயில் போல இல்லாமல் ஆட்டோரிக்ஷா போன்று நிதானமாக செயல்படும்.

எல்லா திட்டங்களையும் நிறுத்திவிட்டதாக பாஜக கூறுவது ஏற்புடையது அல்ல. அந்த திட்டங்களின் செயல்பாட்டில் சில சந்தேகங்கள் உள்ளன. எனவே அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் வளர்ச்சியே முக்கியம். மக்களின் தீர்ப்பை மதித்து நாங்கள் நடக்கவில்லை என்றால், அவர்களே எங்களை தூக்கி எறிவார்கள் என்றார்.