பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த எம்எல்ஏ

சாய்ஹா:

மிசோராம் மாநிலம் சாய்ஷா மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் பெய்ச்சுவா. எம்எல்ஏ. இரு தினங்களுக்கு முன் இவரது தொகுதியை சேர்ந்த 35 வயது பெண்ணுக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால் அவர் இறக்கும் சூழல் உருவானது.

சாய்ஹா மாவட்ட அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் இம்பாலில் நடந்த ஒரு பயிற்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். இந்த தகவல் எம்எல்ஏ பெய்சுவாவுக்கு தெரிவிக்கப்பட்டது. தனது அரசியல் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அவர் திரும்பினார். அந்த பெண்ணை பரிசோதித்த அவர் உடனடியாக அறுவை சிகிச்சையை மேற்கொண்டு அந்த பெண்ணை காப்பாற்றினார்.

இவர் கடந்த 1991ம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார். 52 வயதாகும் அவர் பொது மருத்துவராவார். 20 ஆண்டுகள் பொது மருத்துவராக பணியாற்றி வந்த அவர் 2013ம் ஆண்டில் மிசோ தேசிய முன்னணி கட்சியில் சேர்ந்து அரசியலுக்குள் நுழைந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,‘‘எனது மருத்துவ பணி காலத்தில் நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சைகளை மேற்கொண் டுள்ளேன். எம்எல்ஏ ஆன பிறகு இறுதியாக 2013ம் ஆண்டு செய்தேன்’’ என்றார்.

சாய்ஹா மாவட்ட துணை கமிஷனர் சகாய் கூறுகையில்,‘‘மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் மருத்துவர் பற்றா குறை குறித்து எம்எல்ஏ பேசியபோது, இந்த அறுவை சிகிச்சை செய்தது குறித்து தெரிவித்தார்’’ என்றார்.

2008ம் ஆண்டு சாய்ஹா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்த இவர் 2013ம் ஆண்டில் மிசோ தேசிய முன்னணி கட்சி சார்பில் போட்டியிட்டு காங்கிரஸ் எம்எல்ஏ ஹியாத்தோவை 222 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

சாய்ஹா மருத்துவமனையில் 7 மருத்துவர்கள் உள்ளனர். ஒரே ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மட்டுமே உள்ளார். அவரும் பயிற்சிக்காக சென்றிருந்தபோது தான் இந்த அவசர நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.