என் மீதுள்ள பாலியல் குற்றசாட்டுக்கு சட்டப்படி விரைவில் நடவடிக்கை : எம் ஜே அக்பர்

டில்லி

த்திய அமைச்சர் எம் ஜே அக்பர் தம் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாலியல் சீண்டல் செய்யும் ஆண்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை பாதிக்கப்பட்ட பெண்கள் #மீடூ என்னும் ஹேஷ் டாக் மூலம் சமூக தளங்களில் பதிந்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் பத்திரிகை ஆசிரியரும் தற்போதைய மத்திய அமைச்சருமான எம் ஜே அக்பர் மீது ஒரு பெண் பத்திரிகையாளர் பாலியல் குற்றம் சாட்டி உள்ளார்.

பெண் பத்திரிகையாளரான பிரியா ரமணி ஒரு பத்திரிகையில் பெயரை சொல்லாமல் ஒரு தகவல் தெரிவித்தார். அதில் அவர் ஒரு புகழ்பெற்ற பத்திரிகை ஆசிரியர் தன்னை வேலைக்காக மும்பையில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஓட்டலில் நேர்காணல் நடத்தியதாகவும் அப்பொது அவர் தன்னை ஓட்டல் அறைக்கு வருமாறு கூறியதாக சொல்லி உள்ளார். மேலும் அவர் அப்போது மது அருந்தியபடி இருந்ததாகவும் தன்னையும் மது அருந்த சொல்லி வற்புறுத்தியதாகவும் கூறி உள்ளார்.

மேலும் தன்னை பார்த்து பழைய இந்திப் பாடல்களை பாடியதாகவும் தன்னை அவர் அருகில் அமரச் சொன்னதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் வெளியான சில தினங்களுக்கு பிறகு அந்த பத்திரிகை ஆசிரியர் எம் ஜே அக்பர் என பிரியா டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதற்குப் பிறகு மேலும் மூவர் அக்பரை பற்றி பாலியல் புகார் அளித்தனர்.

எம் ஜே அக்பர் இந்த புகார்கள் எழுந்த சமயத்தில் நாட்டில் இல்லை. தற்போது இந்தியா வந்ததும் அவர் இது குறித்து செய்தியாளர்களிடம், “இந்த புகார்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை. பிரியா ரமணி இதுவரை சும்மா இருந்து விட்டு தேர்தல் சமயத்தில் இவ்வாறு கூறுவது ஏன்? இதன் பின் ஏதாவது நோக்கம் உள்ளதா? இது எனது நற்பெயரைக் கெடுக்கவே இவ்வாறு புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட பிறகும் அவர்கள் என்னுடன் பணி புரிந்துள்ளனர். எது எப்படி இருந்தாலும் நான் இப்போது இந்தியா திரும்பி உள்ளேன். எனது வழக்கறிஞர்கள் இனிமேல் இந்த விவகாரத்தை கவனித்துக் கொள்வார்கள். இது குறித்து நான் விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளேன்.” என தெரிவித்துள்ளார்.