Random image

குடும்பத்தினருடன் கருணாநிதி சமாதியில் அழகிரி அஞ்சலி: பேரணி நிறைவடைந்தது

சென்னை:

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில்  ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன்  நடைபெற்ற “கருணாநிதி நினைவு அமைதி”  12.30 மணி அளவில் மெரினா சென்றடைந்தது. அதைத் தொடர்ந்து அண்ணா சமாதிக்கு அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி குடும்பத்தினர், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவைடைந்த நிலையில், திமுக தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு எதிராக, அவரது அண்ணன் மு.க.அழகிரி போர்க்கொடி தூக்கி உள்ளார். . தி.மு.க.வின்  தென்மண்டல அமைப்பு செயலாளர் பொறுப்பை வகித்த மு.க.அழகிரி, சகோதரர் மு.க.ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 2014-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை அவர் தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், கருணாநிதியின் மறைவுக்கு பிறகு கடந்த மாதம் 13-ந்தேதி தனது குடும்பத்தினருடன் கருணாநிதி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்திய  அழகிரி,   எனது அப்பாவிடம் வந்து ஆதங்கத்தை தெரிவித்தேன். அது என்ன என்பது உங்களுக்கு இப்போது தெரியாது. கருணாநிதியிடம் உண்மையாக விசுவாசம் கொண்ட தொண்டர்கள் அனைவரும் என் பக்கம்தான் இருக்கிறார்கள்’ என்று கூறி திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய மு.க.அழகிரி, சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி செப்டம்பர் 5-ம் தேதி அமைதி பேரணி நடத்த இருப்பதாகவும், அதில் தனது ஆதரவாளர்கள் 1லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்றும் அறிவித்தார்.

அதன்படி அழகிரி ஆதரவாளர்கள் இன்று காலை முதலே அண்ணாசாலை, திருவல்லிக்கேணி பகுதிகளில் குவியத் தொடங்கினார். அதையடுத்து முற்பகல்  11.25  மணி அளவில் திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து பேரணி தொடங்கியது.  பேரணி வாலாஜா சாலை வழியாக, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் 12.30 மணி அளவில் சென்றடைந்தது.

அங்கு முதலில் அண்ணா சமாதிக்கு அஞ்சலி செலுத்திய அழகிரி குடும்பத்தினர் கருணாநிதி நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது அழகிரியுடன் அவரது மகன் துரை தயாநிதி, அழகிரியின் மனைவி மற்றும் மகளும் உடனிருந்தனர்.

மு.க.அழகிரியின் அமைதி பேரணியை தொடர்ந்து, வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. கருணாநிதியின் நினைவிடத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது