மு.க.அழகிரியின் “கருணாநிதி நினைவு அமைதி பேரணி” ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் தொடங்கியது
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நடத்தும் “கருணாநிதி நினைவு அமைதி” ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பேரணி தொடங்கியது.
திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவைடைந்த நிலையில், திமுக தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு எதிராக, அவரது அண்ணன் மு.க.அழகிரி போர்க்கொடி தூக்கி உள்ளார். ஏற்கனவே கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, தன்னை மீண்டும் கட்சியில் சேர்க்க கோரி மன்றாடி வருகிறார்.
இதற்கிடையில், திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 5ந்தேதி சென்னையில் அமைதி பேரணி நடைபெறும் என்றும், கருணாநிதியின் உண்மை விசுவாசிகள் என்பக்கம் உள்ளதாகவும், பேரணியில 1 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று அறிவித்து திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார்.
அதன்படி இன்று மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி நடைபெற உள்ள நிலையில், நேற்று மாலை முதலே தமிழகம் முழுவதும் இருந்து அழகிரி ஆதரவாளர்கள் சென்னையில் குவியத் தொடங்கினர்.
சென்னை அண்ணா சாலையில் இருந்து திருவல்லிக்கேணி செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டு போக்கு வரத்து மாற்றி விடப்பட்டது. சென்னையில் குவிந்து வரும் அழகிரியின் ஆதரவாளர்கள், மெரினாவின் சுற்றுவட்டாரப்பகுதிகள் முழுவதும் சுவரொட்டிகளை ஓட்டியுள்ளனர்.
இந்த நிலையில், அழகிரி அறிவித்தபடி திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகே இருந்து அமைதிப் பேரணி புறப்பட்டது. இது இன்னும் சில நிமிடங்களில் கருணாநிதி நினைவிடத்தையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து தனது அடுத்தக்கட்ட திட்டம் குறித்து மு.க.அழகிரி அறிவிப்பார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
பேரணியில் மு.க.அழகிரி மற்றும் முக்கிய ஆதரவாளர்கள் கருப்பு உடை அணிந்து வாகனத்தில் நின்று கொண்டு செல்கிறார்கள். பேரணியில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
அழகிரியின் அமைதி பேரணி காரணமாக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருன்றனர். 3 துணை ஆணையர்கள் தலைமையில் சுமார் 2 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்