செப்டம்பர் 5 ல் பலப்பரிட்சையா ? : மு க அழகிரி பேட்டி

துரை

ரும் செப்டம்பர் 5 ஆம் தேதி தமது பலத்தை நிரூபித்து காட்ட உள்ளதாக அழகிரி தெரிவித்துள்ளார்.

 

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி.    இவர் தென் மண்டல திமுக பொருப்பாளாளராக இருந்தார்.  மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார்.   அதன் பிறகு கருணாநிதியுடன் ஏற்பட்ட மனத் தாங்கலால் அரசியலை விட்டு விலகி இருந்தார்.    இவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலக்கிய போதிலும் இவர் அமைதியுடன் இருந்தார்.

கருணாநிதி மறைவுக்கு பின் இவர் கருனாநிதியின் நினைவிடத்தில்  தனது ஆதங்கத்தை விரைவில் தெரிவிப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.   அதன் பிறகு இது குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.  இந்நிலையில் நேற்று ஒரு நாளிதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அழகிரி, “திமுக நடத்தும் பொதுக்குழு கூட்டம் பற்றி எனக்குத் தெரியாது.   எனக்கு ஒரு சில ஆதங்கங்கள் உள்ளது.  அதை விரைவில் தெரிவிப்பேன் என கூறி உள்ளேன்.   வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி கருணாநிதியின் நினைவிடத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்த உள்ளேன்.    அதில் 75000 பேரிலிருந்து 1 லட்சம் பேர் வரை பங்கேற்க உள்ளனர்.

எனக்கு பின்னால் பாஜக இருப்பதாக கூறும் குற்றச்சாட்டு பற்றி பலரும் சொல்கிறார்கள்.   ஆனால் நான் கேள்விப்படவில்லை.   எனக்கு பின்னால் கருணாநிதியினுண்மையான தொண்டர்கள் உள்ளனர்.   வேறு யாரும் இல்லை.   அதே போல் ரஜினியுடன் இணைவது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது.  ரஜினியே இன்னும் கட்சியை தொடங்கவில்லை.   பின்னால் நடப்பதை எப்படி முன்கூட்டியே சொல்ல முடியும்?

கருணாநிதி நினைத்தபடி நான் செயல்படுவேன்.    என்னிடம் கடைசியாக அவர் கூறிய வார்த்தைகளை நான் வெளியே சொல்ல முடியாது.   அவருடைய உண்மையான தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் என்பது செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி பேரணியில் தெரிய வரும்.   அன்று நான் என் பலத்தை நிரூபித்துக் காட்டுவேன்” என தெரிவித்துள்ளார்.